Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
உண்மையான மனந்திரும்புதல் – 2015 பதிப்பு

REAL CONVERSION – 2015 EDITION
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமேர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

2015 ஜனவரி 4-ம் தேதி கர்த்தருடைய நாள் காலையில் லாஸ் ஏஞ்சலில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு பிரசங்கம்
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, January 4, 2015

"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு 18:3)


"நீங்கள் மனந்திரும்பாவிட்டால்...பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்" என்று இயேசு தெளிவாகச் சொன்னார். எனவே, நீங்கள் மனந்திரும்புதலை அனுபவிக்க வேண்டும் என்பதை முற்றிலும் தெளிவுபடுத்திவிட்டார். நீங்கள் மனந்திரும்புதலை அனுபவிக்காவிட்டால் "பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" என்று சொன்னார்.

இந்தக் காலையிலே, உண்மையான ஒரு மனந்திரும்புதலை அனுபவிக்கும் ஒரு மனிதனுக்கு என்ன நடக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். நான் சொன்ன "உண்மையான மனந்திரும்புதல்" என்பதைக் கவனித்துப்பாருங்கள். "பாவ அறிக்கை செய்வது", மற்றும் தீர்மானங்கள் எடுப்பது போன்றவைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் ஒரு பொய்யான மனந்திரும்புதலைத்தான் அடைந்திருக்கிறார்கள்.

எங்கள் சபையிலே என் மனைவியையும் சேர்த்து முதல் முறையாக தெளிவான சுவிசேஷம் பிரசிங்கிக்கப்பட்டதைக் கேட்டு மனந்திரும்பினவர்கள் உண்டு. ஆனால், இவர்கள் எல்லோரும் சுவிசேஷத்தைக் கேட்பதற்கு முன்பே தங்கள் வாழ்க்கையிலே பல சந்தர்ப்பங்களின் மூலம் பக்குவப்படுத்தப்பட்ட முதிர்ந்தவர்களாயிருந்தார்கள். அவர்களில் ஒருவரும் சிறு பிள்ளையல்ல. எங்களுடைய சபையில் அனேக முதிர்ந்த வாலிபர்கள் பல மாதங்கள் (பல வருடங்கள் கூட) சபைக்கு வந்து சுவிசேஷ பிரசங்கங்களைக் கேட்டு பிறகுதான் கிறிஸ்துவுக்குள் வந்தவர்களாகும். ஸ்பர்ஜன், "அந்த மாதிரி முதல் முறையிலேயே விசுவாசத்திற்குள் வருபவர்களும் உண்டு, ஆனால், பொதுவாக நாம் பல படிகளைக் கடந்த பிறகுதான் விசுவாசத்திற்குள்ளாக வருகிறோம்" என்று சொல்லியிருக்கிறார். (சி. எச். ஸ்பர்ஜன், Around the Wicket Gate, Pilgrim Publications, 1992 மறு பதிப்பு, பக்கம் 57). இங்கே அனேக மக்கள் கடந்து செல்லும் "படிகளைக்" காணலாம்.

I. முதலாவதாக, நீ மனந்திரும்புவதைக் காட்டிலும் வேறு சில காரணங்களுக்காக சபைக்கு வருகிறாய்.

நான் செய்தது போலவே, ஏறக்குறைய அநேகர் ஆரம்ப சில நாட்களுக்குத் தவறான நோக்கத்தோடுதான் வருகிறார்கள். நான் ஒரு இளநிலை வயதுள்ளவனாய் இருந்தபோது, என் வீட்டிற்கு அருகிலுள்ள குடும்பத்தினர் என்னை அழைத்ததினால் அவர்களோடுகூட நான் சபைக்குச் சென்றேன். 1954-ஆம் ஆண்டு, நான் தனிமையாய் இருந்தபடியினாலும் என் பக்கத்து வீட்டினர் என்னிடம் அன்பாயிருந்தபடியினாலும் அவர்களோடுகூட சபைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அது சரியான காரணமல்ல, அல்லவா? நான் கேட்ட அந்த முதல் பிரசங்கத்தின் இறுதியில் முன்னுக்குச் சென்றேன். ஒருவரும் எனக்கு ஆலோசனை சொல்லவுமில்லை, ஏன் முன்னே வந்தாய் என்றும் ஒருவரும் கேட்காமலேயே எனக்கு ஞானஸ்நானம் கொடுத்து விட்டார்கள். இப்படியாக, நான் ஒரு பாப்திஸ்தாக மாறிவிட்டேன். ஆனாலும், நான் இன்னும் மனமாற்றமடையாமலேயேதான் இருந்தேன். உண்மையாகவே நான் இரட்சிக்கப்பட சபைக்குச் செல்லவில்லை; என் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னிடம் அன்பாயிருந்தபடியால்தான் நான் சபைக்குச் சென்றேன். ஆகையால், ஏழு வருடங்களாக நான் பல கஷ்டங்களுக்குள் சென்றேன். கடைசியாக, 1961-ஆம் ஆண்டு பயோலா கல்லூரியில் (இப்பொழுது பயோலா பல்கலைக்கழகம்) டாக்டர் சார்லஸ் ஜே . வுட்பிரிட்ஜ் அவர்கள் செய்த பிரசங்கத்தைக் கேட்டு செப்டம்பர் 28-ஆம் தேதி நான் மனமாற்றம் அடைந்தேன். அந்த நாளில் நான் இயேசுவை விசுவாசித்தபோது, அவர் என்னைச் சுத்திகரித்து என் பாவங்களிலிருந்து என்னை இரட்சித்தார்.

நீ எப்படி வந்தாய்? நீ தனிமையாய் இருந்தபடியால் சபைக்கு வந்தாயா - அல்லது நீ குழந்தையாய் இருந்தபோது உன் பெற்றோர் உன்னை அழைத்து வந்தார்களா? குழந்தையிலிருந்தே சபையிலே வழக்கமாய் வந்து வளர்ந்து இந்த காலையிலே வந்திருப்பாயானால் அதினாலே நீ மனந்திரும்பிவிட்டாய் என்று அர்த்தமல்ல. அல்லது நான் செய்ததுபோல நீ தனிமையாயிருந்தபோது யாராவது உன்னிடத்தில் அன்புகாட்டி அழைத்தபடியால் நீ சபைக்கு வந்தாயா? அப்படிச் செய்திருப்பாயானால், அதினால் நீ மனந்திரும்பிவிட்டாய் என்று சொல்லிவிடமுடியாது. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளாதே. சபையின் சிறு பிள்ளையைப்போல வழக்கமாக வந்துகொண்டிருக்கிறாயோ அல்லது பதின்மூன்று வயதிலே நான் தனிமையாயிருந்து சபைக்கு வந்தது போல வந்துகொண்டிருக்கிறாயோ - நீ இங்கே இருப்பதைக்குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அவைகளெல்லாம் சபைக்கு வருவதற்கு நியாயமான காரணங்கள்தான் - ஆனால், அவைகள் உன்னை இரட்சிக்காது. நீ இரட்சிக்கப்படுவதற்கு உண்மையான மனந்திரும்புதல் வேண்டும். நீ உண்மையாகவே இயேசுவினாலே இரட்சிக்கப்படவேண்டும். உன்னுடைய பாவ வாழ்க்கையிலிருந்து உன்னை இரட்சிப்பவருக்கு - அதுதான் "சரியான" காரணம்.

நீ தனிமையாயிருப்பதினாலேயோ அல்லது வழக்கத்தின்படியோ எப்படியோ நீ இங்கே வந்திருப்பது தவறு ஒன்றுமில்லை. ஆனால், அது உன்னை இரட்சிப்பதற்குச் சரியான காரணமல்ல. நீ மனந்திரும்புவதற்கு அதைவிட மேலான ஒன்று வேண்டும்; சபைக்கு வருவது உனக்கு நன்றாக இருக்கிறது என்பதினால் அல்ல.

II. இரண்டாவதாக, தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நீ அறிய ஆரம்பிக்கிறாய்.

ஒருவேளை, நீ இந்தச் சபைக்கு வருவதற்கு முன்பாகவே தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நீ உணர்ந்திருக்கலாம். ஆனால் அனேக மக்கள், சுவிசேஷத்தைக் கேட்டு விசுவாசிக்கிறதற்கு முன்பாக, தேவனை விசுவாசிக்கிறதில் உறுதி இல்லாதவர்களாயும், தெளிவு இல்லாதவர்களாயும்தான் இருக்கிறார்கள். ஒருவேளை, உன்னை யாராவது இங்கே அழைத்து வந்திருந்தாலும், நீயும்கூட இப்படிப்பட்ட நிலைமையில்தான் இருக்கலாம்.

நீங்கள் ஒருவேளை சபையிலேயே வளர்க்கப்பட்டிருப்பதினாலே வேதவசனங்களை அதிகமாகவே அறிந்திருக்கலாம். வேதத்தில் எந்த வசனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை சுலபமாக நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் என்ன என்பதையும் கூட நீ அறிந்திருக்கலாம். நீங்கள் அனேக வேதவசனங்களையும் அனேக பாமாலைகளையும் அறிந்திருக்கலாம். ஆனாலும், இன்னும் நீங்கள் தேவனை அறிந்துகொள்ளாமலும் தேவனைப்பற்றி சரியான தெளிவு இல்லாதவர்களாயும்தான் இருக்கிறீர்கள்.

நீங்கள் இந்தச் சபைக்குப் புதியவரோ அல்லது இந்தச் சபையின் பிள்ளையோ எப்படி இருந்தாலும் உனக்குள் ஒரு புதிய காரியம் ஆரம்பிக்கிறது. தேவன் ஒருவர் உண்டு என்பதை நீ அறிய ஆரம்பிக்கிறாய். தேவனைப்பற்றி சும்மா பேசுவதல்ல; தேவன் உனக்கு மிகவும் உண்மை யுள்ளவராகிவிடுகிறார்.

நான் ஒரு சிறுபிள்ளையாய் இருந்ததிலிருந்தே நான் ஒரு மங்கலாகவும் தேவனை விசுவாசிக்கிறதில் தெளிவு இல்லாதவனாகவும்தான் இருந்தேன். ஆனால், நான் பதினைந்து வயதுள்ளவனாகுமட்டும் வேதத்தின் மகத்துவமும் பயங்கரமுமான தேவனை அறிந்து கொள்ளாமலேயே இருந்தேன்.(நெகே 1:5) - என் பக்கத்து வீட்டின் மக்களோடு இரண்டு வருடங்களுக்குமேல் பாப்திஸ்து சபைக்குப் போக ஆரம்பித்தேன். என்னுடைய பாட்டி அடக்கம் பண்ணப்பட்ட நாளிலே நான் கல்லரையிலிருக்கும் மரங்களுக்குள்ளே ஓடி பயந்து வேர்த்து தரையிலே விழுந்தேன். திடீரென்று தேவன் என்மேல் வந்து விழுந்தார் - அப்பொழுது தேவன் உண்மையுள்ளவர் என்பதையும், அவர் சர்வவல்லவர் என்பதையும், அவர் பயங்கரமானவர் என்பதையும் அவர் பரிசுத்தமுள்ளவர் என்பதையும் அறிந்துகொண்டேன். ஆனாலும், இன்னும் நான் மனந்திரும்பாமல்தான் இருந்தேன்.

இதைப்போன்ற ஒரு அனுபவத்தை நீ அனுபவித்திருக்கிறாயா? வேதத்தின் தேவன் உனக்கு உண்மையானவராக இருக்கிறாரா? அது மிகவும் உண்மையானதொன்றாகும். வேதம் கூறுகின்றது,

"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று விசுவாசிக்கவேண்டும்.[அதாவது, தேவன் ஒருவர் இருக்கிறார்]" (எபி.11:6)

தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிக்க கொஞ்சம் விசுவாசம் தேவை - ஆனால், அது இரட்சிப்புக்கேதுவான விசுவாசமல்ல. அது மனமாற்றமுமல்ல. என் தாயார் அடிக்கடி சொன்னது, "நான் எப்பொழுதும் தேவனை விசுவாசித்தேன்." அவள் சொன்னது என் மனதில் கேள்விக்குரியதொன்றுமில்லை. அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே தேவனை விசுவாசித்தாள். ஆனால், அவள் 80 வயதாகும் வரை மனந்திரும்பவேயில்லை. அவள் தேவனை விசுவாசித்தது முக்கியமானதொன்றுதான்; ஆனால், ஒரு மனிதனுக்கு உண்மையான மனந்திரும்புதலை அடைய அதைவிட மேலானதொன்று நடைபெறவேண்டும்.

எனவேதான், நீ ஒருவேளை இந்த காலையில் தேவனின் உண்மைத்துவத்தை அறியாமலேயே இந்த சபைக்கு நீ வந்திருக்கலாம் என்று சொல்லுகிறேன். பிறகு, ஒருவேளை மெதுவாக, அல்லது மிக சீக்கிரமாக, உண்மையாக தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதைக் காண்கிறாய். அது இரண்டாவது படியாகும், ஆனால், அது இன்னும் மனந்திரும்புதல் வரவில்லை என்பதாகும்

III. மூன்றாவதாக, நீ உன் பாவத்தினாலே தேவனைத் துக்கப்படுத்தி அவரைக் கோபப்படுத்தினாய் என்பதை உணருகிறாய்.

வேதம் கூறுகிறது, "மாம்சத்துக்குட்பட்டவர்கள் [அதாவது, மனந்திரும்பாதவர்கள்] தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்."(ரோமர் 8:8) எனவே, மனந்திரும்பாத ஒருவன் என்ன செய்தாலும் ஒன்றும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். அதாவது, நீ ஒரு பாவி என்பதை அறிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும், "உன் குணப்படாத இருதயத்தினாலே கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே." (ரோமர் 2:5) வேதம் கூறுகிறது,

"அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.(சங்.7:11)

தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நீ கண்டுகொண்ட பிறகு, உன் பாவத்தினாலே தேவனை எவ்வளவு வேதனைப்படுத்தினாய் என்பதை நீ அறிந்து கொள்ளுகிறாய். தேவனிடம் அன்பு கூராததினாலேயும் நீ தேவனை வேதனைப்படுத்தினாய். நீ செய்த பாவங்கள் எல்லாம் தேவனுக்கும் அவருடைய கற்பனைகளுக்கும் விரோதமானவைகளாகும். இது உண்மை என்பது பிறகு உனக்குத் தெளிவாகிவிடும். அப்பொழுதுதான் உன் பெரியதான பாவத்தினாலே நீ தேவனிடம் அன்புகூருவதில் எவ்வளவு குறைவுள்ளவனாயிருந்தாய் என்பதைக் கண்டு கொள்வாய். எல்லாவற்றுக்கும் மேலாய், உன் பாவத் தன்மையையும், உனக்குள் நன்மை ஒன்றும் இல்லை என்பதையும், உன் இருதயமே பாவமுள்ளது என்பதையும் அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறாய்.

இந்தப் படியானது "எழுப்புதல்" படி என்று பரிசுத்தவாதிகளால் அழைக்கப்பட்டது. ஆனால், உண்மையான பாவ உணர்வும் பாவத்தைக் குறித்து உள்ளான சுயவெறுப்பும் இல்லாவிட்டால் அங்கே எழுப்புதல் ஒன்றும் இருக்காது. ஜான் நியூட்டன் என்பவர் என்ன செய்தார் என்பதை அவர் எழுதியதிலிருந்து அறிந்துகொள்ளலாம்:

கர்த்தாவே, நான் எவ்வளவு பொல்லாதவனாயும் பரிசுத்தமில்லாதவனாயும் அசுத்தனாயும் இருக்கிறேன், இவ்வளவு பெரிய பாவ பாரத்தை என்னால் எப்படித் தாங்க முடியும்?

இந்தப் பொல்லாத கறைப்பட்ட இருதயம் தான் உமக்குத் தங்கும் இடமோ?
ஐயோ, எவ்வளவாய் நான் தவிக்கிறேனே! என் ஒவ்வொரு பகுதியிலும் என்ன
பாவம் இருக்கிறது என்பதைக் காணச்செய்யும்!
   (“O Lord, How Vile Am I” by John Newton, 1725-1807).

அப்பொழுது, உன் உள்ளான சிந்தையும் உன் இருதயமும் எவ்வளவு பாவமுள்ளது என்பதை நீ ஆழமாக சிந்திக்க ஆரம்பிப்பாய். "என் இருதயம் எவ்வளவு பாவமுள்ளது, நான் தேவனை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கிறேன்" என்று சிந்திக்க ஆரம்பிப்பாய். அந்த சிந்தை உன்னை அலைக்கழிக்கும். உன்னுடைய பாவமுள்ள சிந்தனைகளினாலும், உன்னுடைய குறைவான தேவ அன்பினாலும் அலைகழிக்கப்பட்டு உனக்குள்ளாகக் குழம்பிப்போயிருப்பாய். இந்த நிலையானது, தேவனோடு உறவில்லாத, உயிரில்லாத குளிர்ந்துபோன உன் இருதயத்தைக் குழப்பிவிடும். அப்பொழுது, உன்னைப்போன்ற பாவ இருதயமுள்ள ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையே கிடையாது என்பதை நீ உணர ஆரம்பிப்பாய். தேவன் என்னை நரகத்திற்கு அனுப்புவது நியாயமும் அவசியமும் தான் என்பதை நீ அறிந்துகொள்வாய் - ஏனென்றால், நீ மனம்போல் வாழ்ந்தாயே. உனக்கு உண்மையான புத்துணர்வு உண்டாகும்போது நீ எந்த அளவுக்கு பாவத்திலே வாழ்ந்து தேவனுக்கு விரோதமாய் எழும்பி அவரை எவ்வளவு கோபப்படுத்தினாய் என்பதைச் சிந்திக்க ஆரம்பிப்பாய். இந்தப் புத்துணர்வு உனக்கு உண்டாக வேண்டியது முக்கியமான ஒன்றுதான், ஆனால் அது அல்ல மனந்திரும்புதல் என்பது; அது மனந்திரும்புதல் என்பது இன்னும் வரவில்லை என்பதாகும். ஒருவன் தான் எவ்வளவு பாவமுள்ளவன் என்பதை உணர்வது ஒரு புத்துணர்வுதான் - ஆனாலும் அவன் இன்னும் மனந்திரும்பவில்லை. பாவ உணர்வையும் தாண்டிப் போகக்கூடியதுதான் மனந்திரும்புதல் என்பதாகும்.

நீ உடனே ஒருவேளை நான் தேவனைப் பிரியப்படுத்தவில்லை, அல்லது தேவன் என்மேல் பிரியாமாயில்லாமல் மிகவும் கோபமாயிருக்கிறார் என்று உணரலாம். நீ முற்றிலும் புத்துணர்வு அடைந்து நீ எவ்வளவு பாவமுள்ளவனாகவும் பரிசுத்தமில்லாதவனாகவும் இருக்கிறாய் என்ற உண்மைக்கு வந்த பிறகுதான் நீ மனந்திரும்புதலின் நான்காம் ஐந்தாம் படிகளுக்குப் போக தகுதியுள்ளவனாய் இருப்பாய் .

சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் தான் 15 வயதாக இருந்தபோதுதான் பாவத்தைக் குறித்து ஒரு புத்துணர்வை அடைந்தார். அவரது தகப்பனாரும் பாட்டனாரும் பிரசங்கிமார்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்கள் புதுமையான "ஒப்புக்கொடுத்தல்" என்ற தெளிவில்லாததும் உண்மையான மனமாற்றம் அடையாதுமான ஒரு தவறான அனுபவத்தைக் கொடுத்த நாட்களாகும். ஆகையால், அவரது தகப்பனாரும் பாட்டனாரும் அவர் "இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க" அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, தேவன் தாமே அவருக்குள் ஒரு முழுமையான மனமாற்றத்தின் வேலையைச் செய்ய தேவனுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் செய்தது சரியானதுதான் என்று நான் நினைக்கிறேன்.

ஸ்பர்ஜன் பதினைந்து வயதாயிருந்தபோது கடைசியிலே அவர் ஒரு ஆழமான பாவ உணர்வுக்குள்ளாக வந்தார். ஸ்பர்ஜன் அவரது பாவத்தன்மையின் புத்துணர்வைக் குறித்து இவ்விதமாக இந்த வார்த்தைகளினாலே விவரிக்கிறார்:

திடீரென்று, தேவனுடைய நியாயப்பிரமாணத்தைத் தன் கையில் ஏந்திக் கொண்டிருந்த மோசேயைச் சந்தித்தேன். அவர் தனது அக்கினிமயமான கண்களினால் என்னை ஆராய்ந்து பார்ப்பதைப்போல் பார்த்தார். அவர் [என்னை வாசிக்கச் சொன்னார்] 'தேவனின் பத்து வார்த்தைகள்' - பத்து கட்டளைகள் - நான் அவைகளை வாசித்தபோது அவைகளெல்லாம் சேர்ந்து ஒரு பரிசுத்த தேவனின் கண்களுக்கு முன்பாக என்னைக் குற்றப்படுத்திப் புறக் கணிப்பதைப்போல் காட்சியளித்தது.

அவர், அந்த அனுபவத்தில், தேவனுடைய பார்வையில் தான் பாவி என்பதையும் எவ்வளவு "பக்தியும்" எந்த "நற்கிரியையும்" இரட்சிக்காது என்பதையும் கண்டுகொண்டார். வாலிபனாகிய ஸ்பர்ஜன் நிம்மதியில்லாமல் பெரிதான சோர்புக்குள்ளாகச் சென்றுகொண்டிருந்தார். தேவனோடு சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள அனேக வழிகளில் முயற்சி செய்தும், அவருடைய முயற்சிகளெல்லாம் தோல்வியைத்தான் கொண்டுவந்தன. ஆனால், அது மனந்திரும்புதலின் நான்காவது படிக்கு நம்மைக் கொண்டு செல்கிறது.

IV. நான்காவதாக, நீ உன்னுடைய இரட்சிப்பைச் சம்பாதிக்க, அல்லது இரட்சிக்கப்படுவது எப்படிஎன்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறாய்.

புத்துணர்வு பெற்ற மனிதன் தான் பாவி என்று உணர்வான், ஆனால் அது இயேசுவிடம் திரும்பச் செய்யாது. ஏசாயா தீர்க்கதரிசி இந்த நிலைமையை விவரிக்கும்போது, "அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவரை எண்ணாமற்போனோம்."(ஏசா.53:3) நாம் ஆதாமைப் போலே இருக்கிறோம், அவன் தான் பாவி என்று அறிந்திருந்தான், ஆனால் இரட்சகருக்குத் தன்னை மறைத்துக்கொண்டான், அத்தி இலைகளினாலே தன் பாவத்தை மூட முயற்சித்தான் (ஆதி. 3:7,8).

ஆதாமைப்போல, பாவத்தைக்குறித்துப் புத்துணர்வு பெற்ற பாவியும் தன் பாவத்திலிருந்து தன்னை இரட்சித்துக் கொள்ள இப்படித்தான் சில காரியங்களைச் செய்ய முயற்சிக்கிறான். இரட்சித்துக் கொள்ளுவது எப்படி என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்கிறான். ஆனால், அறிந்துகொள்வது ஒரு நன்மையையும் கொடுப்பதில்லை என்பதை அதாவது, "எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" (II தீமோ. 3:7) தன்மையை அவன் கண்டுகொள்கிறான். அல்லது, இயேசுவை அறிந்துகொள்வதற்குப் பதிலாக ஒருவேளை உணர்ச்சியை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கலாம். இப்படி "உணர்ச்சியை" எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் சிலர் மாதக் கணக்காக அப்படியே போய்க்கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால், "உணர்ச்சியினாலே" ஒருவரும் இரட்சிக்கப்படுகிறதில்லை. ஸ்பர்ஜன் தன்னுடைய பாவத்தைக்குறித்துப் புத்துணர்வு பெற்றிருந்தார். ஆனால், இயேசுவை விசுவாசிப்பதினால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும் என்பதை அவர் நம்பவில்லை. அவர் இப்படியாகச் சொன்னார்:

நான் கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பு, "நான் இருக்கிறவண்ணமாகவே இயேசுவை விசுவாசித்தால் நான் இரட்சிக்கப்படுவேன் என்பது நிச்சயமாக முடிகிறகாரியாமா? நான் வேறு சில காரியத்தை உணரவேண்டும்; நான் வேறு ஏதாவது காரியத்தைச் செய்யவேண்டும்" என்று நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன் என்கிறார்(ibid.).

அது உன்னை ஐந்தாவது படிக்குக் கொண்டுசெல்கிறது.

V. ஐந்தாவதாக, கடைசியாக நீ இயேசுவிடம் வந்து அவரை மட்டுமே நம்புகிறாய்.

வாலிபனாகிய ஸ்பர்ஜன் கடைசியாக ஒரு பிரசங்கியார், "இயேசுவை நோக்கிப்பார்... உன்னை நீயே பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமுமில்லை...இயேசுவையே நோக்கிப்பார்." அவருடைய எல்லா உபத்திரவங்கள், உள்ளான போராட்டங்கள் அவருடைய வேதனைகள் எல்லாவற்றுக்கும் - பிறகு கடைசியாக ஸ்பர்ஜன் பரவசத்தையும் தன்னையும் நோக்கிப்பார்ப்பதை விட்டுவிட்டு இயேசுவையே நோக்கிப்பார்த்து அவரையே விசுவாசித்தார். ஸ்பர்ஜன், "நான் இரத்தத்தினாலே (இயேசுவினாலே) இரட்சிக்கப்பட்டேன்! நான் வீடு செல்லும் வரை நடனமாடிக் கொண்டே சென்றேன்” என்று சொன்னார்.

அவர் இயேசுவை விசுவாசித்தபோது - உடனே இயேசு அவரை இரட்சித்தார். ஒரு இமைப்பொழுதிலே அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தன் பாவங்களற கழுவப்பட்டார்! இது ஒரு சுலபமான காரியந்தான், ஆனாலும் எந்த ஒரு மனிதனும் பெற்று அனுபவிக்கவேண்டிய மிக முக்கியமான அவசியமான அனுபவமாகும். சகோதரனே, அதுதான் உண்மையான மனந்திரும்புதல் ஆகும்! "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று வேதம் கூறுகிறது(அப்போ.16:31).

ஜோசப் ஹர்ட் சொன்னார்,

ஒரு பாவி சிலுவையிலறையப்பட்ட தேவனை
விசுவாசித்த அந்த இமைப்பொழுதிலேயே அவருடைய
மன்னிப்பைப்பெற்று அவருடைய இரத்தத்தினாலே
இரட்சிப்பை முழுமையாக பெற்றுக்கொள்கிறான்.
   (“ஒரு பாவி விசுவாசித்த இமைப் பொழுதிலேயே” by Joseph Hart, 1712-1768).

முடிவுரை

இயேசு சொன்னார்,

"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" (மத்.18:3).

மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கதா பாத்திரத்தைப் போல் எந்தவிதமான உணர்ச்சிவசப்பட்டும் "கிறிஸ்துவுக்காக தீர்மானம்" எடுக்காதே. வேண்டாம்! வேண்டாம்! உன்னுடைய மனந்திரும்புதல் உண்மைதானா என்பதை உறுதிபடுத்திக்கொள், ஏனென்றால், நீங்கள் உண்மையாக மனந்திரும்பவில்லை என்றால், "பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" (மத்.18:3).

உண்மையான மனந்திரும்புதலைப் பெற்றுக்கொள்ள

1.  தேவன் ஒருவர் இருக்கிறார் என்ற விசுவாசத்திற்குள்ளாக நீ வரவேண்டும் - பாவிகளை நரகத்திலே தள்ளக்கூடியவரும், இரட்சிக்கப்பட்டவர்களை அவர்கள் மரிக்கும்போது பரலோகத்திற்கு அழைத்து செல்பவருமாகிய உண்மையான ஒரு தேவன்.

2.  நீ தேவனை அதிகமாக துக்கப்படுத்திய ஒரு பாவி என்பதை உனக்குள்ளே அறிந்திருக்கவேண்டும். நீ ஒரு வேளை இப்படி நீண்ட காலமாக போய்க்கொண்டிருக்கலாம் (அல்லது குறுகிய சிலகாலமாயும் இருக்கலாம்) நமது உதவி போதகர் டாக்டர் கேகன் அவர்கள், "நான் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட அனேக மாதங்களாக இரவுகளிலே தூக்கமில்லாமல் போராடிக்கொண்டிருந்தேன். இந்த நாட்களை நான் விவரிக்கவேண்டுமானால் இது என்னுடைய இரண்டு வருட மனக்கோளாறு என்றுதான் சொல்லவேண்டும்" (C. L. Cagan, Ph.D., From Darwin to Design, Whitaker House, 2006, p. 41).

3.  நீ துக்கப்படுத்தி கோபப்படுத்திய தேவனோடு ஒப்புரவாக நீ எந்த நற்காரியத்தையும் செய்ய முடியாது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். எந்தவிதமான சொற்களோ, அறிவோ, செயலோ, பரவசமோ எதுவுமே உனக்கு உதவி செய்ய முடியாது. இது உன் சிந்தையிலும் உன் இருதயத்திலும் தெளிவாய் இருக்கவேண்டும்.

4.  நீ தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவருடைய இரத்தத்தினாலே உன் பாவங்களற கழுவப்பட வேண்டும். டாக்டர் கேகன் அவர்கள், "நான் எப்பொழுது (இயேசுவை) நம்பினேன் என்ற சரியான வினாடியைக்கூட என்னால் சொல்லமுடியும்...எனக்கு உடனே (இயேசுவை) பார்ப்பதைப்போல் இருந்தது...நான் நிச்சயமாக இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திலே இருந்தேன் இயேசுவும் எப்போதும் என்னோடிருந்தார். அனேக வருடங்களாக அவர் எனக்காக காத்திருந்த போதிலும், அன்பாக எனக்கு இரட்சிப்பை அளித்தபோதிலும் நான் அவரை விட்டு விலகிதான் இருந்தேன். ஆனால் அவரை விசுவாசிக்கும் படியான நேரம் எனக்கு வந்துவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன். ஒன்று நான் கர்த்தரிடம் வரவேண்டும் அல்லது அவரை விட்டு விலகிவிட வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில்தான் சில நிமிடங்களில் நான் இயேசுவிடம் வந்தேன். அதிலிருந்து நான் சுய நம்பிக்கையாகவோ அவிசுவாசியாகவோ இருக்கவில்லை. நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்துவிட்டேன். நான் அவரை நம்பிவிட்டேன். எந்த அளவுக்கு நான் தேவனைவிட்டு தூரமாய் ஓடிக்கொண்டிருந்தேனோ...அந்த அளவுக்கு சுலபமாக அந்த இரவிலே நான் உடனே இயேசுவிடம் திரும்பி வந்துவிட்டேன்" (C. L. Cagan, ibid., p. 19). அதுதான் ஒரு உண்மையான மனந்திரும்புதல். இயேசு கிறிஸ்துவிடம் மனந்திரும்புவதுதான் நீ அனுபவிக்கவேண்டிய ஒரு அனுபவம்! இயேசுவிடம் வந்து அவரை நம்பிவிடு! அவர் உன்னை இரட்சித்து சிலுவையிலே சிந்தின அவரது இரத்தத்தினாலே உன் எல்லா பாவங்களிலிருந்தும் உன்னைக் கழுவி சுத்திகரிப்பார்! ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் ஜெபம் செய்தவர் Mr. Abel Prudhomme.
பிரசங்கத்திற்கு முன்னால் தனிப்பாடல் பாடியவர்
         Mr. Benjamin Kincaid Griffith: “Amazing Grace” (John Newton, 1725-1807).


முக்கிய குறிப்புகள்

உண்மையான மனந்திரும்புதல் – 2015 பதிப்பு

REAL CONVERSION – 2015 EDITION

by Dr. R. L. Hymers, Jr.

"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்,பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.18:3)

I.   முதலாவது, நீ மனந்திரும்பவேண்டும் என்பதைவிட வேறு ஏதோ
ஒரு காரணத்திற்காகத்தான் சபைக்கு வருகிறாய்,

II.  இரண்டாவதாக, நீ தேவன் ஒருவர் இருக்கிறாரா என்பதை அறிய
ஆரம்பிக்கிறாய், நெகேமியா 1:5; எபிரெயர் 11:6.

III. மூன்றாவதாக, நீ உன் பாவத்தினாலே தேவனைத் துக்கப்படுத்தி
அவரைக் கோபப்படுத்தினாய் என்பதை உணர ஆரம்பிக்கிறாய், ரோமர் 8:8; 2:5; சங்கீதம் 7:11.

IV.  நான்காவதாக, நீ இரட்சிப்பைச் சம்பாதிக்க முயற்சிக்கிறாய் அல்லது இரட்சிக்கப்படுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள
முயற்சிக்கிறாய், ஏசாயா 53:3; ஆதியாகமம் 3:7,8; II தீமோத்தேயு 3:7.

V.  ஐந்தாவதாக, கடைசியாக நீ இயேசுவிடம் வந்து அவரை மட்டுமே நம்கிபுகிறாய், அப்போஸ்தலர் 16:31.