Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிருபாதார பலி!

(செய்தி எண்: 11 ஏசாயா 53)
PROPITIATION!
(SERMON NUMBER 11 ON ISAIAH 53)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 13, 2013 அன்று சனிக்கிழமை மாலை வேளையில் லாஸ்
ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, April 13, 2013

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக் கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).


நான் இன்று இரவு தேவனைப்பற்றிச் சொல்லப் போகும் செய்தியானது உங்களில் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் இதை கேட்பவர் வெறுக்கவும் செய்யலாம். இன்று மக்கள் தேவனைப்பற்றி அப்படிப்பட்ட தவறான யோசனைகள் கொண்டிருக்கிறார்கள். யாராவது வேதத்தின் தேவனைக் குறித்துப் பேசினால் அது அவர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது, சிறப்பாக குறிப்பிட்ட சில வகையான பிரசங்கியார்களுக்கு மட்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நூறு இளம் வாலிபர்களுக்கு சுவிசேஷ செய்தி கொடுக்கும்படி ஒரு மூத்த பாஸ்டர் என்னிடம் சொன்னார். இதற்கு முன்பாக நான் அங்கே அநேக தடவைகள் பேசியிருக்கிறேன், அதனால் அந்த சபைக்கு எந்த செய்தி தேவை என்று எனக்குத் தெரியும் என நான் நினைத்தேன். ஆனால் இந்த தடவை இரண்டு இளம் பாஸ்டர்கள் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். நான் தேவனுடைய நியாயத் தீர்ப்பை உறுதிபடுத்தும் ஒரு இரட்சிப்பின் செய்தியை பிரசங்கித்தேன், முடிவில் கிறிஸ்துவின் நற்செய்தியை தெளிவாக அவர்களுக்கு முன்பாக வைத்தேன். அழைப்பிற்கு பிறகு இருபத்தி ஏழு வாலிபர்கள் அதை ஏற்றுக்கொண்டு முன்வந்தார்கள். இது முதல் முறையாகச் செய்யப்பட்ட ஒரு வேலையாகும், அந்த கல்லூரியின் நான்கில் ஒரு பங்கு மாணவர்கள் ஆஜராகி இருந்தார்கள்.

அந்த பொறுப்பான இரு இளம் பாஸ்டர்களும் அப்படிப்பட்ட அதிகமானபேர் ஏற்றுக் கொண்டதைக் குறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் பிசங்கம் முடிந்தவுடன் கொடூரமானக் கோபத்தோடு காணப்பட்டார்கள். அவர்கள் அந்த சபையின் பொதுவான வழக்கத்தின்படி, எனக்கு நன்றி அறிவிப்பை எழுதி அனுப்பவில்லை, மற்றும் எனக்கு வெகுமானமாக நன்கொடையும் கொடுக்கவில்லை. அவர்கள் அவ்வளவாக குளிர்;ந்துபோனதைப்பற்றி நான் மிகவும் ஆச்சரியப் பட்டேன். நான் அவர்களுக்கு மிகவும் எதிரிடையானவன் என்றும், தேவன் பாவத்தை நியாயந்தீர்ப்பார் என்பதைப்பற்றி அந்த வாலிபர்களுக்கு எச்சரிப்பைக் கொடுக்காமல் அவர்களுக்கு அழைப்பு கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைத்தார்கள் என்று நான் பின்னர் அறிந்து கொண்டேன். அதுமுதற்கொண்டு அநேக நவீன பாஸ்டர்கள் தங்கள் கருத்துக்களை அவ்விதமாக பகிர்ந்து கொள்ளுகிறார்கள் என்று கண்டு கொண்டேன். அதாவது “சுவிசேஷத்தை மட்டும் கொடு. தேவனுடைய அன்பை மட்டும் பேசு. மக்கள் கிளர்ச்சி யடைந்து அசௌகரியம் அடையும் வகையில் அவர்கள்உணரும்படி செய்யாதே.” இதுதான் அவர்களது பார்வை. இன்று இந்தவிதமாக பிரசங்கிமார்கள் உணருவதை நான் அடிக்கடி கண்டேன். ஆனால் அந்த விதமான எண்ணத்தில் பயங்கரமான கெடுதி இருப்பதாகவும், அப்படிப்பட்ட சுவிசேஷ பிரசங்கத்தில் தவறு இருப்பதாகவும் குறை இருப்பதாகவும் நான் உணர்த்தப் பட்டேன்.

டாக்டர் A.W. டோசர் (Tozer) சொன்னார், “ஒரு மனிதன் முதலாவது தேனுடைய பயத்தை அறிந்து கொள்ளாவிட்டால் அவன் தேவனுடைய மெய்யான கிருபையை அறிந்து கொள்ளவே முடியாது” (The Root of Righteousness, Christian Publications, 1955, p. 38). அவர் மிகச்சரியாக எழுதி இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். “முதலாவது தேனுடைய பயத்தை அறிந்து கொள்ளாவிட்டால் எந்த ஒரு மனிதனும் தேவனுடைய மெய்யான கிருபையை அறிந்து கொள்ளவே முடியாது.” டாக்டர் A.W. டோசர் (Tozer) சொன்னதையே டாக்டர் மார்டீன் லாய்டு-ஜோன்ஸ் அவர்கள் அப்படியே சரியாக விசுவாசிக்கிறார். லேன் H. மூரீ அவர்கள் சொல்கிறார், “டாக்டர் லாய்டு-ஜோன்ஸ் அவர்கள் தேவனுக்கு முன்பாக மனிதனுடைய குற்றத்தின் மெய்யான அபாயத்தைப் பற்றி பிரசிங்கிக்கும் பொழுது தேவ கோபம் நிச்சயமாக உண்டு... பாவத்தின் தண்டனையே நரகம்... வேதாகமப் போதனையில் எச்சரிப்பானது மிகவும் அத்தியாவசியமான ஒரு பகுதியாகும். நரகம் என்பது ஒரு தியரி அல்ல...” (Rev. Iain H. Murray, The Life of Martyn Lloyd-Jones, The Banner of Truth Trust, 2013, p. 317).

மறுபடியுமாக, டாக்டர் லாய்டு-ஜோன்ஸ் அவர்கள் சொன்னார், “தேவனைப் பற்றி பொய்யாக சிந்திப்பதுதான் ஜென்ம சுபாவமுள்ள மனிதனின் எல்லாப் பாவங்களிலும் மகாமோசமான பாவகுற்றமாகும்” (ibid., p. 316). மறுபடியுமாக, பிரபலமான பாப்டிஸ்ட் சுவிசேஷகர், டாக்டர் ஜான் R. ரைஸ் அவர்கள் அதிஸ்டவசமாக டாக்டர் A.W. டோசர் மற்றும் டாக்டர் மார்டீன் லாய்டு-ஜோன்ஸ் அவர்கள் சொன்ன அதே காரியத்தை குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகவும் உற்சாகமூட்டும் வகையில் இருப்பதைக் கண்டேன். டாக்டர் ரைஸ் சொல்கிறார்,

வேதாகமத்தின் தேவன் ஒரு பயங்கரமான தேவன், அபாயகரமான தேவன், ஒரு வைராக்கியமிக்க பழிக்குப் பழிவாங்கும் தேவன், அதேசமயத்தில் இரக்கத்தின் தேவன் (John R. Rice, D.D., The Great and Terrible God, Sword of the Lord Publishers, 1977, p. 12).

டாக்டர் ரைஸ் சொன்னார்,

இந்த தற்கால நவீன பிரசங்கிகள் பிரமாணத்தை விட்டுவிட்டு கிருபையையும், மனந்திரும்புதல் இல்லாமல் விசுவாசத்தையும், தேவனுடைய கோபமில்லாமல் தேவ இரக்கத்தையும், நரகத்தை இல்லாமல் பரலோகத்தையும் பிரசங்கிக்கிறார்கள்... இது தேவனுடைய சத்திய வழியல்ல. இது தேவனுக்கு பதிலாக தான் நிற்பதாகும். இது தேவனுடைய செய்தியை கனவீனமாக கொடுக்கும் ஒரு காரியமாகும். தேவன் ஒரு பயங்கரமான தேவன், அபாயகரமான தேவன், ஒரு வைராக்கியமிக்க பழிக்குப்பழிவாங்கும் தேவன், பாவத்திற்கு எதிராக பட்சிக்கிற அக்கினியாக இருக்கிற தேவன், பயப்படத்தக்க ஒரு தேவன், பாவிகளை அவருக்கு முன்பாக நடுங்க வைக்கும் ஒரு தேவன் (ibid., pp. 13, 14).

ஆமென்! டாக்டர் ஜான் ஆர். ரைஸ் (John R. Rice) அவர்கள், டாக்டர் A.W. டோசர் (Tozer) மற்றும் டாக்டர் மார்டீன் லாய்டு-ஜோன்ஸ் அவர்களின் கருத்துக்களை இந்த குறிப்பிட்ட காரியத்தில் முழுமையாக ஒத்து வருவதை அவர்களின் செய்திகளை வருஷக்கணக்காக படித்திலிருந்து நான் அறிந்து கொண்டேன். தேவன், “பாவத்திற்கு எதிராக பட்சிக்கிற அக்கினியாக இருக்கிற தேவன்.”

வேதாகமம் சொல்லுகிறவிதமாக, தேவனை நாம் பார்க்கும்போது, நமது பாடமாகிய ஏசாயா 53:10ல் நமக்கு எந்த பிரச்சனையும் வருவதற்கு இடமில்லை. இந்த பாடமானது பிதாவாகிய தேவனையும் மற்றும் நமது இரட்சிப்பிற்காக தேவன் கர்த்தராகிய இயேசுவுக்கு செய்தததையும் மையமாகக் கொண்டதாகும்.

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்பு கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).

“தேவன்... கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:25).

டாக்டர் W.A. கிரிஸ்வெல் அவர்கள் சொல்லும்பொழுது “கிருபாதார பலியானது பாவத்திற்கு விரோதமாக இருந்த தேவனுடைய நீதியின் எதிர் பார்த்தலை கிறிஸ்து நிறைவேற்றினதையும் மற்றும் தேவனுடைய நீதியின் நிமித்தமாக மனிதனுடைய குற்றத்தை நிவர்த்தி செய்து தேவனை திருப்தி செய்த சிலுவையின் கிரியையையும் குறிப்பதாகும்” (W. A. Criswell, Ph.D., The Criswell Study Bible, Thomas Nelson Publishers, 1979, p. 1327, note on Romans 3:25).

“தேவன்... கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:25).

தி ரீபார்மேஷன் ஸ்டடி பைபுளில் (The Reformation Study Bible) அந்த வசனம் சொல்லுகிறது, “கிறிஸ்து கிருபாதார பலியாக மரித்ததானது பாவிக்கு விரோதமாக இருந்த தெய்வீக நியாயத்தீர்ப்பை திருப்தி செய்யவும், மன்னிப்பையும் நீதிமானாக்குதலையும் கொண்டு வருவதற்காகவே ஆகும். ஆனால் அந்த [தேவகுமாரனின்] கிருபாதாரபலியினால் பிதாவாகிய தேவன் நம்மை நேசிக்கும்படி செய்யவில்லை என்று பவுல் கவனமாகக் குறிப்பிடுகிறார். அதற்கு எதிர்மறையானதுதான் உண்மை - அதாவது தேவனுடைய அன்பு தமது குமாரனைப் பலியிடும்படியாகச் செய்தது” (The Reformation Study Bible, Ligonier Ministries, 2005, p. 1618, note on Romans 3:25).

“தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புகொடுத்தார்” (ரோமர் 8:32).

நமது பாடம் சொல்லுவது போல,

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக் கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).

இந்த பாடத்தில் கிறிஸ்துவின் வேதனை மிகுந்த பாடுகளுக்கு மெய்யான காரண கர்த்தா தேவன் என்று நாம் பார்க்கிறோம். “தேவன் நிர்ணயித்திருந்த [முன்னதாக ஏற்படுத்தப்பட்ட] ஆலோசனையின் படியேயும், அவருடைய முன்னறிவின் படியேயும்” (அப்போஸ்தலர் 2:23) கிறிஸ்து பாடுபட்டு மரித்தார். மகத்துவமான மற்றும் பயங்கரமான வேதத்தின் தேவனே கிறிஸ்துவின் பாடுகளுக்கும் மரணத்திற்கும் மெய்யான காரணர். “தேவன் தமது ஒரேபேரான குமாரனை கொடுத்தார்” என்று யோவான் 3:16 சொல்லுகிறது (யோவான் 3:16). மேலும், ரோமர் 8:32ல் “தம்முடைய… சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தார்” என்று சொல்லப்படுகிறது (ரோமர் 8:32). பாவத்திற்கு விரோதமாக இருந்த தேவனுடையக் கோபம் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மேல் விழுந்தபடியினால் அது கிருபாதார பலியானது. நமது பாடம் சொல்லுகிறதுபோல,

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக் கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).

இங்கே பிதாவாகிய தேவன் தமது குமாரனை அனுப்பி பாடுகளுக்கு உட்படுத்தி சிலுவையிலறைய ஒப்பு கொடுத்ததைக்காட்டும்படிக்கு ஏசாயா நம்மைத் “திரைக்கு பின்னால்” கொண்டு செல்லுகிறார் அதனால் தேவனை சாந்தப்படுத்த முடிந்தது, மற்றும் அவருடையக் கோபம் பாவியின்மீது விழுவதற்கு பதிலாக இயேசுவின்மீது விழுந்தது. நமது பாடத்தில் நாம் பார்ப்பது (1) தேவன் அவரை நொறுக்கினார்; (2) பாடுகளுக்கு உட்படுத்தினார்; (3) அவருடைய ஆத்துமா தன்னைப் பாவநிவாரணபலியாக ஒப்பு கொடுக்கும்படி செய்தார்.

I. முதலாவதாக, தேவன் இயேசுவை நொறுக்கினார்.

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமானார்” (ஏசாயா 53:10).

“நொறுக்கினார்” என்ற வார்த்தை “நசுக்கினார்” என்று மொழி பெயர்க்கப்பட்டது. “கர்த்தரோ அவரை நசுக்கச் சித்தமானார்”. டாக்டர் எட்வர்டு ஜே. யெங் சொன்னார், “[கிறிஸ்துவின்] கபடற்ற நிலைமையில், தேவன் அவரை நொறுக்கி [மற்றும் நசுக்கி] சித்தம் கொண்டார். அவரது மரணம் பொல்லாதவர்களின் கைகளினால் அல்ல ஆனால் கர்த்தருடைய கரத்தினால் நிகழ்ந்தது. அவருடைய மரணத்திற்குப் பொறுப்பு அவரை கொலை செய்த மக்கள் அல்ல, ஆனால் அவர்கள் அந்த சூழ்நிலையின் கட்டுப்பாட்டில் இல்லை. கர்த்தர் அனுமதித்ததை மட்டுமே அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்” (Edward J. Young, The Book of Isaiah, William B. Eerdmans Publishing Company, 1972, volume 3, pp. 353-354).

நான் முன்பே சொன்னதுபோல, கிறிஸ்துவைப் பற்றின இந்த காரியமானது ரோமர் 3:25ல் தெளிவாக உள்ளது,

“தேவன்... கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:25).

மற்றும் யோவான் 3:16ல், அது,

“ஒரேபேரான குமாரனை… தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவத்திற்கு விரோதமாக இருந்த அவருடைய கோபத்தை மாற்றி, பாவியான மனிதனுக்கு இரட்சிப்பைச் சாத்தியமாக்கினார்.

“கர்த்தரோ அவரை நொறுக்கச் [நசுக்க] சித்தமானார்” (ஏசாயா 53:10).

கெத்சமனே தோட்டத்தில் ஆரம்பித்து, பிதாவாகிய தேவன் தமது குமாரனை நொறுக்கினார் மற்றும் நசுக்கினார். மத்தேயு மூலமாக நமக்குச் சொல்லப்படுகிறது போல கெத்சமனே தோட்டத்தில், தேவன் சொன்னார், “மேய்ப்பனை வெட்டுவேன்” (மத்தேயு 26:31). மாற்கு சுவிசேஷத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது “மேய்ப்பனை வெட்டுவேன்” (மாற்கு 14:27). இவ்வாறாக தேவன் இயேசுவை, பாவத்திற்கு பிரதிபலனாக இருளிலே கெத்சமனே தோட்டத்தில் கொடூரமாக நொறுக்கினார், மற்றும் நசுக்க ஆரம்பித்தார். ஸ்பர்ஜன் இதைப்பற்றிச் சொல்லும்பொழுது,

இப்பொழுது நமது கர்த்தர் பிதாவின் கரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை எடுத்தார். யூதரிடமிருந்தல்ல, துரோகியாகிய யூதாசிடமிருந்தல்ல, தூங்கிக் கொண்டிருந்த சீஷரிடமிருந்தல்ல, பிசாசிடமிருந்து சோதனை வரவில்லை இப்பொழுது [கெத்சமனேயில்], ஆனால் தாம் பிதாவாக அறிந்திருந்தவர் மூலமாக அந்த பாத்திரம் நிரப்பப்பட்டது... அவருடைய ஆத்துமாவை வியப்படைய செய்தது மற்றும் அவருடைய உள்ளான இருதயத்தை உபத்திரவப்படுத்தின பாத்திரம். அவர் அதில் [மறுபடியும்] குடித்தார், அது [கோப்பை] சரீர வேதனையைவிட கொடூரமானது என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், அதுவரையிலும் அவர் குடிக்கவில்லை... அது சகிக்க முடியாத பயங்கரமான ஒன்று, வியக்கத்தக்க விதத்தில் கொடூரம் நிறைந்தது, பிதாவின் கரத்திலிருந்து [அவருக்கு] வந்தது. “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமானார்…” என்று வாசிக்கும்போது சகல சந்தேகமும் நீக்கப்படுகிறது. நம்முடைய அக்கிரமங்களை எல்லாம் கர்த்தர் அவர்மீது [விழப்பண்ணினார்] சுமத்தினார். பாவமறியாத அவரை நமக்காக பாவமாக்கினார். பிறகு, இரட்சகர் இந்த அசாதாரணமான அழுத்தம் அடையக் காரணம் என்ன...அவர் பாவியின் [ஸ்தானத்தில்] பாடுபடவேண்டிய அவசியமாக இருந்தது. அந்த கொடிய வேதனையின் இரகசியம் இங்கே [கெத்சமனேவில்] இதை [முழுமையாகவிளக்கி] என்னால் உங்களுக்கு முன்பாக சொல்ல முடியாது, இது எவ்வளவு உண்மையில்லையா-
‘இது தேவனுக்கே, தேவனுக்கு மட்டுமே,
அந்த துக்கம் முழுமையாக அறியப்பட்டது.’
(C. H. Spurgeon, “The Agony in Gethsemane,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1971 reprint, volume XX, pp. 592-593).

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமானார்” (ஏசாயா 53:10).

மனுவர்க்கத்தின் பாவத்தின் பாரமெல்லாம் கெத்சமெனேவில் அவர்மேல் ஊற்றப்பட்டது, கிறிஸ்து நொறுக்கப்பட்டார், உன்னுடைய பாவத்தின் பாரத்தினால் அவர் நசுக்கப்பட்டார், அதனால்

“அவர் மிகவும் வியாக்கூலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

இதுவரையிலும் எந்த ஒரு மனிதனுடைய கையும் அவரைத் தொட்டதில்லை. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை, அவர் இன்னும் அடிக்கப்படவில்லை, வாரினாலோ அல்லது சிலுவையில் அடிக்கப்படவோ இல்லை. தேவனே அவரை கெத்சமெனேவில் நொறுக்கினார் மற்றும் நசுக்கினார். “மேய்ப்பனை வெட்டுவேன்” (மத்தேயு 26:31) என்று சொன்னது பிதாவாகிய தேவனே . இதையே தேவன் ஏசாயா மூலமாக தீர்க்கதரிசனமாக சொன்னார்,

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமானார்” (ஏசாயா 53:10).

அவர் சுமந்த கோபத்தை எந்த நாவாலும் விவரிக்க முடியாது,
   அந்த கோபம் என்மேல் வரவேண்டியது:
பாலைவனத்தைப் போன்ற பாவம்; அவர் அனைத்தையும் சுமந்தார்,
   பாவியை விடுவித்து சுதந்தரனாக்க!
(“The Cup of Wrath” by Albert Midlane, 1825-1909;
to the tune of “O Set Ye Open Unto Me”).

II. இரண்டாவதாக, தேவன் இயேசுவை பாடுகளுக்கு உட்படுத்தினார்.

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்.... ” (ஏசாயா 53:10).

மறுபடியுமாக, தேவனே தமது ஒரேபேரான குமாரனை பாடுகளுக்கு உட்படுத்தினார். அவருடைய பாடுகளின் போதும் மற்றும் மரணத்தின் போதும் அவர் துக்கத்தை அனுபவித்தார். டாக்டர் ஜான்கில் சொன்னார்,

அவரை துக்கத்திற்குட்படுத்தினார் [பாடுபடுத்தினார்]... அவரை விட்டுவைக்கவில்லை, ஆனால் பொல்லாதவர்களின் கைகளில் மரணத்திற்கு ஒப்பு கொடுத்தார்: அந்த தோட்டத்திலே அவருடைய ஆத்துமா மிகுந்த துக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது; அவர் சிலுவையிலே, அவரது மக்களின் பாவபாரத்தால் [மற்றும்] அவரது பிதாவின் கோபத்தினால் ஆணி அடிக்கப் பட்டார்; மற்றும் அவரது முகத்தை அவருக்கு மறைத்துக் கொண்டபொழுது, என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? என்று கதரினார்.... மனதிலும் சரீரத்திலும் வேதனை அடைந்தார் [அனுமதித்தார்] (John Gill, D.D., An Exposition of the Old Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, vol. V, page 315).

இயேசு நொறுக்குதலையும், வேதனைகளையும் மற்றும் பாடுகளையும் விருப்பத்தோடு அனுபவித்தார், நமது பாவங்களுக்காக உபத்திரவங்களையும், கசையடிகளையும் மற்றும் சிலுவையில் அறையவும் தாமாகவே ஒப்புகொடுத்தார். அவர் சொன்னார்,

“என்னுடைய சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்” (யோவான் 6:38).

“தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப் பட்டார்” (அப்போஸ்தலர் 2:23).

“நமக்காக சாபமானார்” (கலாத்தியர் 3:13).

“நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே (1 யோவான் 2:2).

“தேவன்... இரத்தத்தினாலே... கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:25).

அவர் சுமந்த கோபத்தை எந்த நாவாலும் விவரிக்க முடியாது,
   அந்த கோபம் என்மேல் வரவேண்டியது;
பாலைவனத்தைப் போன்ற பாவம்; அவர் அனைத்தையும் சுமந்தார்,
   பாவியை விடுவித்து சுதந்தரனாக்க!
(“The Cup of Wrath” by Albert Midlane, 1825-1909).

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது…” (ஏசாயா 53:10).

III. மூன்றாவதாக, தேவன் இயேசுவின் ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்பு கொடுக்கும்படி செய்தார்.

நாம் அனைவரும் எழுந்து நின்று நமது பாடத்தை “குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது” என்ற வார்த்தை வரைக்கும் சத்தமாக வாசிப்போம்.

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).

நீங்கள் அனைவரும் அமரலாம்.

இந்த வசனத்தின் ஆரம்பத்திலுள்ள (கர்த்தரோ) “ரோ” என்ற வார்த்தையை கவனியுங்கள். அது இதற்கு முன்னுள்ள ஒன்பதாம் வசனத்தைக் குறிக்கிறது, “அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. (இருந்தாலும்) கர்த்தரோ....” (ஏசாயா 53:9,10அ). இயேசு பாவமே இல்லாதவராக இருந்தாலும், “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்…” டாக்டர் கேபிலியன்ஸ் புத்தகத்தில், “வசனம் 10அ பார்க்கும் பொழுது அதிர்ச்சி அடைய செய்கிறது [கிறிஸ்துவின்] தனிப்பட்ட நீதி, மத்தியஸ்தரான அவரது பங்களிப்பு அவமதிக்கப்பட்டதையும் காண்கிறோம். பிறகு இந்த பாடுகளை பதிலிடையான சுபாவத்திற்கு இதை எழுதினவர் மறு அழைப்பு விடுகிறார்… உடனடியாக தேவன் குரூரமானவராக அல்ல ஆனால் ஆச்சரியமான கிருபையுள்ளவராகக் காணப்படுகிறார்” (Frank E. Gaebelein, D.D., General Editor, The Expositor’s Bible Commentary, Zondervan, 1986, volume 6, p. 304).

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).

“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்…” (ரோமர் 8:32).

“அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24).

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21).

“அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்பு கொடுக்கும்போது” (ஏசாயா 53:10).

அவர் சுமந்த கோபத்தை எந்த நாவாலும் விவரிக்க முடியாது,
   அந்த கோபம் என்மேல் வரவேண்டியது;
பாலைவனத்தைப் போன்ற பாவம்; அவர் அனைத்தையும் சுமந்தார்,
   பாவியை விடுவித்து சுதந்தரனாக்க!
(“The Cup of Wrath” by Albert Midlane, 1825-1909).

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்பு கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).

கிறிஸ்து பாவத்திற்காக தேவனுடைய பலியானார். கிறிஸ்து உன்னுடைய ஸ்தானத்தில் உனக்கு பதிலாக மரித்தார். கிறிஸ்து உனக்காக கொடூரமாகப் பாடுபட்டார், கிருபாதாரபலியாக, உன்னுடைய பாவத்திற்குறிய தண்டனைக் கிரயத்தைச் செலுத்த, தேவனுடைய கோபத்தை உன்னைவிட்டு திருப்ப மற்றும் அதையெல்லாம் தன்மேல் எடுத்துக் கொள்ளவே. அவரது கைகளையும் பாதங்களையும் துளைத்த ஆணிகளை நினைக்கும்போது அது உனக்காகவே ஏற்கப்பட்டது. நீதியின்படி பாவம் மன்னிக்கப்பட்டவனாக உன்னை தேவனிடம் கொண்டுவரும்படியாக, அநீதியானவர்களுக்காக நீதிமானாக அவர் மரித்தார். ஸ்பர்ஜன் சொன்னார்,

மனிதன் பாவத்திற்காக நித்திய அக்கினிக்கு தீர்க்கப்படுகிறான்; கிறிஸ்துவை தேவன் பதிலாக நியமித்தார் என்பது உண்மை, அவர் கிறிஸ்துவை நித்திய அக்கினிக்கு அனுப்பவில்லை, ஆனால் துக்கத்தை அவர்மேல் ஊற்றினார், மிகவும் நம்பிக்கையற்றபடி, நித்திய அக்கினிக்கும் அது தகுதியான கிரயமாகும்... கிறிஸ்து அந்த நேரத்தில் நமது கடந்தகால, நிகழ்கால மற்றும் வருங்கால சகல பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு அவைஅனைத்துக்காகவும் அப்போதே மற்றும் அங்கேயே தண்டிக்கப்பட்டார், அவர் நம்முடைய [ஸ்தானத்தில்] பாடுபட்டபடியினால் நாம் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டோம். பிதாவாகிய தேவன் எப்படியாக அவரை நொறுக்கினார், என்று பார்க்க முடிகிறதா? அவர் அப்படி செய்யாதிருந்திருந்தால், கிறிஸ்துவின் பாடுகள் நம்முடைய [தகுதியானவர்களான படியினால்] பாடுகளாக இருந்திருக்க [நரகத்தில்] முடியும். (C. H. Spurgeon, “The Death of Christ,” The New Park Street Pulpit, Pilgrim Publications, 1981 reprint, volume IV, pp. 69-70).

இருந்தாலும் கிறிஸ்துவின் மரணம் எல்லா மனிதரையும் நரகத்திலிருந்து இரட்சிக்க முடியாது. கிறிஸ்துவை நம்புகிறவர்கள் மட்டுமே இரட்சிக்கப் படுவார்கள். அவர் பாவிகளுக்காக மரித்தார், பாவிகளுக்காக மட்டுமே மரித்தார்; தங்கள் உள்ளத்திலே தாங்கள் பாவிகள் என்று உணர்ந்து, மற்றும் கிறிஸ்துவின் மன்னிப்பை வேண்டுவோருக்காக மட்டுமே அவர் மரித்தார்.

உன்னுடைய பாவ உணர்வும் மற்றும் இயேசு உனக்கு வேண்டும் என்ற உணர்வும் உன்னுடைய பாவத்திலிருந்து அவருடைய மரணம் உன்னை குணமாக்கும் என்பதைக் காட்டும். கிறிஸ்துவின் மரணத்தை சிறிது நினைத்து பிறகு மறந்துவிடுபவர்கள், கிறிஸ்து அவர்களுக்காக சிலுவையிலே செலுத்தின அவர்களுடைய பாவங்களுக்கான கிரயத்தை தள்ளிவிட்ட படியினாலே, நித்திய தண்டனையைப் பெற்றுக்கொள்ளுவார்கள்.

அதிக ஆழமாக மற்றும் கடினமாக நினைத்துப் பாருங்கள். டாப் லேடியின் பெரிய “கிருபாதாரபலி”ப் பாடலை அதிக ஆழமாக மற்றும் கடினமாக சிந்தித்துப் பா(டு)ருங்கள்.

எனக்காக குற்றமற்ற ஆட்டுக்குட்டி கொடுக்கப்பட்டார்
   அவருடைய பிதாவின் கோபத்தை அவர் சுமந்தார்;
அவருடைய இரத்தகாயத்தை காண்கிறேன் அதிலே
   எனது பெயர் எழுதி இருப்பதை அறிகிறேன்.
கர்த்தருடைய இரத்த ஊற்றிலிருந்து,
   இந்திரநீல மின்சாரம் ஓடுதே;
அவர் பெற்ற ஒவ்வொரு காயங்களும்
   அவருடைய அன்பை மனிதனுக்கு காட்டுதே.
எனக்காக, இரட்சகரின் இரத்தம் காத்திருக்குதே,
   கிருபாதார பலியானார் சர்வ வல்லவர்;
ஆணிகள் பாய்ந்த அவருடைய கரங்கள் – என்னை
   அழைத்துச் செல்லுமே அவரது சிங்காசனத்திற்கு.
(“Propitation” by Augustus Toplady, 1740-1778;
      to the tune of “At the Cross”).

இப்பொழுது, பிறகு, நீ இயேசுவை ஏன் நம்பக்கூடாது? நீ அவரை நம்புவதற்கு தடையாக இருப்பது என்ன? நீ அவரை நம்பமுடியாதபடிக்கு உனக்குள் மறைந்து இருக்கும் இரகசிய பாவம் என்ன? எந்த பொய்யான மற்றும் முட்டாள்தனமான ஆசை உன்னை இரட்சகரைவிட்டு விலக்குகிறது? நீ முக்கியமானதாக நினைக்கும் எதை இழந்து போய்விடுவோம் என்ற பயம் உன்னை நிறுத்துகிறது? தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவிக்க பயங்கரமான தேவகோபத்தைச் சுமந்த கிறிஸ்துவை நம்பாதபடி தடை செய்யும் மறைவான காரணம் என்ன? அப்படிப்பட்டசகல எண்ணங்களையும் தூக்கி உனக்குப் பின்னாக எரிந்துவிட்டு – “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29)ஐ நம்பு. அவர் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இனிமேலும் தாமதம் செய்யாதே. இப்பொழுதே, இன்று இரவே அவரை நம்பு. அவரை நம்புகிறவர்களுக்காகவும், அவரை தேடவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்காகவும், மற்றும் அவரால் இரட்சிக்கப்பட விரும்புகிறவர்களுக்காகவும் விசாரணை அறை திறந்திருக்கிறது.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

செய்திக்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு.பென்ஜமின் கின்சாடு கிரிபீத்:
     “Propitiation” (by Augustus Toplady, 1740-1778; to the tune of “At the Cross”).


முக்கிய குறிப்புகள்

கிருபாதார பலி!

(செய்தி எண்: 11 ஏசாயா 53)
PROPITIATION!
(SERMON NUMBER 11 ON ISAIAH 53)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக் கொடுக்கும் போது” (ஏசாயா 53:10).

(லூக்கா 16: 23; ரோமர் 3:25 8:32; அப்போஸ்தலர் 2:23; யோவான் 3:16)

I.    முதலாவதாக, தேவன் இயேசுவை நொறுக்கினார்,
ஏசாயா 53:10அ; மத்தேயு 26:31; மாற்கு 14:27; லூக்கா 22:44.

II.   இரண்டாவதாக, தேவன் இயேசுவை பாடுகளுக்கு உட்படுத்தினார்,
ஏசாயா 53:10ஆ; யோவான் 6:38.

III.  மூன்றாவதாக, தேவன் இயேசுவின் ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்படி செய்தார், ஏசாயா 53:10இ; ஏசாயா 53:9-10அ;
ரோமா; 8:32; 1 பேதுரு 2:24; 2 கொரிந்தியர் 5:21; யோவான் 1:29.