Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, அடிக்கப்பட்ட இயேசு

(ஏசாயா 53ல் பிரசங்கம் எண் 6)
JESUS WOUNDED, BRUISED AND BEATEN
(SERMON #6 ON ISAIAH 53)
(Tamil)

Dr. R. L. ஹைமர்ஸ், Jr.

பாப்டிஸ்ட் டேபர்னேக்கல், லாஸ் ஏஞ்சலஸில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு செய்தி
சனிக்கிழமை மாலை, மார்ச் 23, 2013
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, March 23, 2013

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5).


ஒன்றைக் குறித்து அறிந்திருப்பதற்கும் அதைப் பற்றிய முழு அறிவைப் பெற்றிருப்பதற்குமிடையிலான வேறுபாட்டைக் காண்பிக்க ரோமர் முதல் அதிகாரத்தில் இரு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைக் கால மனிதர் 'தேவனை அறிந்திருந்தனர்' என ரோமர் 1:21ல் நமக்குச் சொல்லப்படுகிறது. அறிந்திருத்தல் என்பதற்கான கிரேக்கச் சொல், நோஸிஸ் (gnosis) என்பதாகும். ஆயினும், அவர்கள் தேவனை 'அறிந்து ஏற்றுக்கொள்ளவில்லை' என ரோமர் 1:28 கூறுகிறது. 'அறிந்து ஏற்றுக்கொள்வது' என்பதற்கான கிரேக்க வார்த்தை எப்பிநோஸிஸ் (epignosis) ஆகும். நோஸிஸ் (அறிதல்) என்பதனுடைய ஒரு பலப்படுத்தப்பட்ட வடிவத்தை அது குறிப்பிடுகிறது - இன்னும் பலமான ஆதிக்கத்தோடு கூடிய ஒரு பூரண அறிவை அது வெளிப்படுத்துகிறது (W E வைன் எழுதிய, புதிய ஏற்பாட்டு சொற்களின் விளக்க அகராதி, ரெவல் வெளியீடு, 1966, தொகுதி II, பக்கம் 301). பன்டைக் கால மனுக்குலத்தோர் தேவனைப் பற்றி அறிந்திருந்தாலும் (நோஸிஸ்), அவரைக் குறித்த தனிப்பட்ட அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லை (எப்பிநோஸிஸ்). அவர்கள் தனிப்பட்ட ரீதியில் தேவனை அறியவில்லை.

கர்த்தருடைய இராபோஜனம் என்னும் நியமனத்தை நாம் ஆசரிக்கையில், அப்பத்தையும் திராட்சரசத்தையும் நாங்கள் பெற்றுக்கொள்வதை கவனமாய்ப் பார்த்துக்கொண்டும், இரட்சிக்கப்படாததினால் அதில் பங்குப்பெற முடியாமலிருக்க உங்களில் சிலரை ரோமர் 1ம் அதிகாரத்திலுள்ள அந்த இரு கிரேக்க வார்த்தைகள் விளக்குவதாக நான் எண்ணுகிறேன். வெளிப்பிரகாரமாகவும் மனரீதியிலும் கர்த்தருடைய இராபோஜனம் என்னவென்று நீங்கள் அறிந்திருந்தாலும் அச்சம்பவம் விளக்கமாக வருணிக்கின்ற கிறிஸ்துவை அனுபவத்தில் நீங்கள் அறிந்திருக்கவில்லை. அதைக் குறித்த ஒரு அறிவு (நோஸிஸ்) உங்களுக்கிருந்தாலும் கிறிஸ்துவைக் குறித்த ஒரு முழுமையான அறிவு (எப்பிநோஸிஸ்) உங்களுக்கு இல்லை. இயேசு கிறிஸ்துவை நீங்கள் அறியவில்லை.

வேதப்பாடப் பகுதியும்கூட அப்படித்தான். வசனங்களின் வெளிப்படையான அமைப்பையும் அவற்றின் அர்த்தத்தையும் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனாலும் உங்கள்மீது வல்லமையாக ஆதிக்கம் செலுத்துமளவிற்கு வசனங்களின் உள்ளான அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டு அதைப் பற்றிக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஆனபடியால், வசன பகுதியின் ஆழமான அர்த்தத்திற்கு உங்களது கவனத்தைக் கொண்டு செல்வதே எனது நோக்கமாகும். இயேசு கிறிஸ்துவுடனான ஒரு தனிப்பட்ட அனுபவத்தை இவ்வசனங்ளை மனரீதியில் ஆழமாக அறிவது அதிகபடுத்துமென நான் நம்புகிறேன்.

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5).

மனமாற்றம் அடைய நம்புகின்ற உங்களது இருதயத்தை இவ்வசனம் கவ்விப் பிடிக்க வேண்டும். இவ்வசனம் உங்களை வெறும் மூளை அறிவிலிருந்து இயேசு கிறிஸ்துவின் மீதான ஒரு உன்மையான நம்பிக்கை உறுதிக்கு கொண்டு செல்வதாக – உங்களது பாவத்தின் அபராதத்தைச் செலுத்துவதற்காக அவர் சிலுவையில் மரித்தார். இந்த வசன பகுதியில் மூன்று முக்கிய குறிப்புகள் உள்ளன.

I. முதலாவதாக, கிறிஸ்துவானவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்.

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்…” (ஏசாயா 53:5).

வசனம் 4ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இயேசு தமது சொந்த பாவங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் மரித்தாரெனும் தவறான கருத்திற்கும், நமது பாவங்களுக்காக கிரயம் செலுத்தி அவர் மரித்தார் என்னும் சரியான நிலைப்பாட்டிற்குமிடையிலான வேறுபடுதலை 5ம் வசனத்தின் ஆரம்பம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. பண்டிதர் எட்வர்ட் J யெங் ஒரு பழைய ஏற்பாட்டு மேதை. எனது சீனப் போதகரான பண்டிதர் டிமோத்தி லின்னும் பழைய ஏற்பாட்டில் வித்தகர். பண்டிதர் யெங் கூறுகிறார், 'அவர்' என்பது முதலாவது வருவது குறிப்பிடத்தக்கது. தண்டனை பெற வேண்டியவர்களோடு வேறுப்படுத்தும் வண்ணமாக அவர் குற்றவாளிகளின் பாவங்களைச் சுமந்தார்' (எட்வர்ட் J யெங் Ph.D., ஏசாயா புஸ்தகம், வில்லியம் B எர்டுமென்ஸ் வெளியீட்டு நிறுவனம், 1972, பகுதி 3, பக்கம் 347).

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்…” (ஏசாயா 53:5).

'காயப்பட்டு' என்கிற வார்த்தை முக்கியமானது. எபிரேய மொழியில் இச்சொல்லின் அர்த்தம் உருவக் குத்துவது என பண்டிதர் யெங் கூறுகிறார். அதாவது, மரணமடையும்படி உருவக்குத்துவது என்னும் கருத்தை இவ்வார்த்தை கொடுக்கிறது. எபிரேய மொழியில் இவ்வார்த்தை உருவக்குத்துதல் அல்லது துளைத்துச் செல்லுதல் எனப் பொருள்படுகிறது. சகரியா 12:10லும் இவ்வார்த்தை வருகிறது,

'அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து'”(சகரியா 12:10).

இது கிறிஸ்துவைக் குறித்த ஐயத்துக்கிடமற்ற ஒரு தீர்க்கதரிசனம். முட்களால் வேயப்பட்ட கிரீடத்தால் அவரது மண்டை ஓடு துளைக்கப்பட்டது. அவரது கைகளும் கால்களும் சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட்டன. ரோம ஈட்டி அவரது விலாவில் குத்தப்பட்டது. அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார்,

'ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது… வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. ஆல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்பார்கள் என்று வேதவாக்கியம் சொல்லுகிறது' (யோவான் 19:34,36,37).

பின்பு, நமது வேத பகுதி கூறுகிறது, 'நமது அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார்' (ஏசாயா 53:5). நொறுக்கப்படுதல் என்பதற்கான எபிரெய வார்த்தை கசக்கிப் பிழியப்படுதல் எனவும் பொருள்படும். சிலுவையிலறையப்படுவதற்கு முந்தின இரவில் கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்துவின் கசக்கிப் பிழியப்படுதலும் நொறுக்கப்படுதலும் ஆரம்பமாயின.

'அவர் மிகவும் வியாகுலப்பட்டார்... அவருடைய வேர்வை இரத்ததின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது' (லூக்கா 22:44).

கெத்செமனே தோட்டத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட நமது பாவத்தின் பாரத்தால் கிறிஸ்துவானவர் அழுத்தி நசுக்கப்பட்டார்.

சில மணி நேரத்திற்குப் பின், சிலுவையிலறையப்படுவதற்கு முன்பாக அடிபட்டு, கசையடிபட்ட கிறிஸ்துவானவர் சிதையுண்டு நசுக்கப்பட்டார். பின் விலாவில் ஈட்டியால் குத்தினார்கள். ஆயினும் அவர் நொறுக்கப்பட்டார் என்பதற்கான ஆழமான அர்த்தமென்னவெனில் அவர் மீது சுமத்தப்பட்ட நமது பாவச் சுமைகளின் அழுத்தமே. அப்போஸ்தலனாகிய பேதுருவும்,

“அவர் தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்” (I பேதுரு 2:24).

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” (ஏசாயா 53:5).

தாம் எழுதிய பிரபலமான பாடல் மூலம் இதை பண்டிதர் ஐசக் வாட்ஸ் தெளிவுபடுத்துகிறார்,

நான் செய்த பாதகச் செயலுக்காக அல்லவோ
அவர் சிலுவை மரத்தில் வேதனையுடன் முணங்கினார்?
வியக்கவைக்கும் இரக்க உணர்வு! இதுவரை அறிந்திராத கிருபை!
எல்லை கடந்த அன்பின் பெருக்கு!

சூரியன் இருளுக்குள் மறைந்து
தனது மகிமைகளை மூடிக் கொண்டதோ,
வல்லமைமிக்க சிருஷ்டிகர், கிறிஸ்துவானவர்
சிருஷ்டிப்பான மனிதனின் பாவத்திற்காய் மரித்தபோது.

II. இரண்டாவதாக, நமது ஸ்தானத்தில் கிறிஸ்து ஆக்கினை அடைந்தார்.

நமது வசனப் பகுதியிள்ள மூன்றாவது துணை வாசகத்தை கவனியுங்கள்,

'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. ..' (ஏசாயா 53:5).

இந்த வசனத்தின் கருத்தை உணராமல் பல ஆண்டுகளாக இதை நான் வாசித்திருக்கிறேன். பண்டிதர் டெலிட்ஸ்ச் இதை, 'நமது சமாதானத்துக்கு நம்மை நடத்திடும் ஆக்கினை' என மொழியாக்கம் செய்துள்ளார் (C.F. கெய்ல் மற்றும் F டெலிட்ஸ்ச், பழைய ஏற்பாட்டு விளக்கவுரை, எர்டுமென்ஸ் வெளியீட்டு நிறுவனம், 1973 மறுபதிப்பு, பகுதி VII, பக்கம் 319). 'நமது சமாதானம்... நமது பொதுவான ஆரோக்கிய நிலை, நமது ஆசீர்வதிக்கப்பட்ட நிலை இவைகளைத்தான் இந்த பாடுகள் பெற்றுத்தந்தன'. ஆக்கினை என்பது தண்டனையாகும். பண்டிதர் யெங் சொன்னார், 'சினந்தணிவிப்பு என்னும் நோக்கத்திற்காக கிறிஸ்துவின் மீது ஆக்கினை விழுந்ததென ஒருவர் உறுதிபடக் கூறுவாரென்றால் அவர் இவ்வசனப் பகுதியை சரியாக படிக்கவில்லை' (யெங், அதே புத்தகப் பகுதி, பக்கம் 349). பாவத்திற்கு எதிரான தேவ கோபத்தை தணிக்கின்ற சரிக்கட்டுகின்ற தேவனுடைய நீதி கிறிஸ்துவின் மேல் விழுந்தது. நவீன கால விளக்கவுரையாளர்கள் செல்ல அஞ்சுகின்ற தூரம் வரை செல்லும் பண்டிதர் ஜான் கில் சரியாக கூறுகிறார்,

நமது சமாதானத்திற்கேதுவான ஆக்கினை அவர் மீது சுமத்தப்பட்டது. அதாவது, நமது பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். இவ்வாறாக நமது சமாதானமும் தேவனோடு ஒப்புரவாகுதலும் அவரால் செய்யப்பட்டன… இவ்வாறாக தேவ கோபாக்கினை ஈடுகட்டப்பட்டது, சமாதானம் ஏற்படுத்தப்பட்டது (ஜான் கில் D.D., பழைய ஏற்பாட்டிற்கான ஒரு விளக்கவுரை, பாப்டிஸ்ட் கொடி பிடிப்போன், 1989 மறுபதிப்பு பாகம் I, பக்கம் 312).

கிறிஸ்து தேவ கோபாக்கினையை தணித்ததைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது,

‘கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்' (ரோமர் 3: 24-26).

இந்தப் பிரசங்கதிற்கு முன் திரு க்ரிஃபித் பாடிய பாடலில், பவுல் எதைக் குறிப்பிடுகிறாரென ஆல்பர்ட் மிட்லேன் விளக்குகிறார்:

அவர் சுமந்த கோபாக்கினையை நாவால் இயம்ப இயலாது
   அக்கோபாக்கினை எனக்குத்தான்
பாவம் கைவிடப்பட்டது, அவர் அனைத்தையும் சுமந்தார்
   பாவியை விடுதலை செய்யும்படி.

ஒரு துளிகூட இப்போது மிச்சமாயில்லை
   'எல்லாம் முடிந்தது' அவரின் முழக்கம்
ஒருவரின் பலனுள்ள வறட்சி
   கோபாக்கினை கிண்ணத்தை அவர் வறண்டிடச் செய்தார்.
('கோபாக்கினையின் கிண்ணம்' ஆல்பர்ட் மில்லேன், 1825-1909).

உங்களது பாவத்திற்கெதிரான தேவக்கோபாக்கினை என்னும் தெய்வீக சரிக்கட்டுதலை உண்டு பண்ணும்பொருட்டு உங்களது ஸ்தானத்தில் கிறிஸ்துவானவர் நொறுக்கப்பட்டு தண்டனை அனுபவித்தார்.

'நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது' (ஏசாயா 53:5).

III. மூன்றாவதாக, தமது தழும்புகளின் மூலம் கிறிஸ்து நமது பாவத்தை குணமாக்குகிறார்.

நமது வேத பகுதியை எழுந்து நின்று சத்தமாய் வாசியுங்கள், அதன் கடைசிப் பகுதியைக் கவனியுங்கள் 'அவரது தழும்புகளால் குணமாகிறோம்.'

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5).

இப்போது நீங்கள் அமரலாம்.

'அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்'. எபிரெய மொழியில் தழும்புகள் என்பது காயங்கள் எனப் பொருள்படுகிறது (ஸ்ட்ராங்). I பேதுரு 2:24ல் பேதுரு இவ்வசனத்தைக் குறிப்பிடுகிறார். இங்கு பேதுருவின் வார்த்தை கிரேக்க மொழியில் 'தழும்புகள்' என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது காயத்தினால் ஏற்பட்ட வடுக்கள் (ஸ்ட்ராங்). ஏசாயா 53:5லும் I பேதுரு 2:24லிலும் 'அவரது தழும்புகளால் நாம் குணமாகிறோம்' என வருவது சவுக்கடிகளால் இயேசுவை அடித்ததைக் குறிப்பதாக நான் திட்டமாக நம்புகிறேன். சிலுவையில் கிறிஸ்து அறையப்படுவதற்கு சற்று முன்பாக, யூதேயாவின் ரோம அதிபதியான பிலாத்துவின் கட்டளைப்படி கிறிஸ்துவானவர் போர்சேவகரால் சவுக்கடிபட்டதையே இவ்வசனம் குறிக்கிறது,

'பிலாத்து இயேசுவை பிடித்து வாரினால் அடிப்பித்தான்' (யோவான் 19:1).

'அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்' (மத்தேயு 27:26).

'வாரினால் அடித்தல்' என்பதை விளக்கும் W E வைன், அது கிறிஸ்துவால் பொறுமையாய் சகித்துக் கொள்ளப்பட்டதும் பிலாத்துவின் கட்டளையின்படி நிறைவேற்றப்பட்டதையும் தெரிவிக்கிறது என்கிறார். ரோம சவுக்கடி முறைமையின்படி, ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு, குனிந்த நிலையில் ஒரு தூணில் கட்டி வைக்கப்படுவார். அந்த சவுக்கானது தோல் வார்களால் செய்யபட்டு, அவற்றின் முனைகளில் கூரான எலும்பு அல்லது ஈயத்துண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அவை முதுகிலும், மார்பிலும் சதையை கிழித்துவிடும். இவ்வாறான தண்டனை முறையினால் மரணமடைந்த இரத்த சாட்சிகளைத் தான் பார்த்ததாக யூஸேபியஸ் (நாளாகமம்) பதிவு செய்திருக்கிறார் (W E வைன், புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி, ஃப்ளெமிங் H ரெவெல் கம்பெனி, 1966 மறுபதிப்பு, பகுதி III, பக்கம் 327, 328). வரப்போகிற தமது பாடுகளைக் குறித்து தீர்க்கதரிசனமுறைத்த இயேசுவும் 'வாரினால் அடிக்கப்படுதலை குறித்து பேசுகிறார்,

'இதோ, எருசலேமுக்கு போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதப்பாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, அவரை பரியாசம் பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும், புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பார்கள்' (மத்தேயு 20:18,19).

கிறிஸ்துவானவர் வாரினால் அடிக்கப்பட்டதை ஸ்பர்ஜன் இவ்வாறு விளக்குகிறார்:

அமைதியாக நின்று, இயேசுவானவர் ஒரு ரோம தூணில் கட்டப்பட்டு வாரினால் அடிக்கப்பட்டுவதைக் காணுங்கள். சவுக்கின் பயங்கரமான அடிகள் குருதி வழியும் காயங்களை ஏற்படுத்துகின்றனர். அவரது ஆசீர்வதிக்கப்பட்ட சரீரத்தோடு அவர் எவ்வாறாக ஒரு வேதனையின் பிண்டமாக மாறுவதை கவனித்துப் பாருங்கள். பின்னர் அவரது ஆவியும் எவ்வாறு நொறுக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள். கொடூரச்செயலால் தாங்க முடியாத அளவுக்கு அவரது உள்ளான இருதயம் காயமடையும் வரை அவருடைய ஆவியில் விழுந்த சவுக்கடிகள்தான் எத்தனை! இவை யாவற்றையும் நமக்காக அவர் சகித்துக்கொண்டார்... மனதில் சற்றும் அலைப்பாயாமல் இந்த புனிதமான கருத்தைத் தியானியுங்கள். தேவனுக்கு நன்றி தெறிவிக்கும் அன்பால் நமது சொந்த இருதயங்கள் நமக்குள்ளாக உருகும்வரை நானும் நாமும் இக்கருத்தை சேர்ந்து யோசிக்குமாறு நான் ஜெபிக்கின்றேன் (C H ஸ்பர்ஜன், 'கிறிஸ்தியம்' மாநகர ஆசரிப்புக் கூடார பலிபீடம், யாத்ரீகன் வெளியீடுகள், 1976 மறுபதிப்பு, பாகம் XLIII, பக்கம் 13).

நமது பாவங்களுக்காக கிறிஸ்துவானவர் கசையடிகளையும் சிலுவைப் பாடுகளையும் அனுபவித்தாரென திரும்பவும் ஸ்பர்ஜன் கூறுகிறார். உனக்காகவும் எனக்காகவும் இயேசு கசையடிபட்டு சிலுவையில் அறையப்பட்டு தழும்புகளை அடைந்தார். ஸ்பர்ஜன் கூறுகிறார்:

அவரது துக்கங்களில் நிச்சயமாகவே நமக்கு ஒரு பங்கு உண்டு, 'அவரது தழும்புகளால் குணமாகிறோம்' என்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்வோமா? நீங்கள் அவரை அடித்தீர்கள். அன்பு நன்பரே, நீங்கள் அவரைக் காயப்படுத்தினீர்கள். ஆகையால், 'அவரது தழும்புகளால் நாம் குணமாகிறேன்' என சொல்லக் கூடும் வரை இளைப்பாற வேண்டும். அவரது தழும்புகளால் நாம் குணமடைய வேண்டுமானால் பாடுபட்ட இயேசுவைக் குறித்த ஒரு தனிப்பட்ட உறவு நமக்கு வேண்டும். இந்த மாபெரும் தியாக பலியின் மீது நமது கரங்களை வைத்து அது நமக்காக நடந்து முடிந்துவிட்டது என நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்து அடிக்கப்பட்டாடிரன அறிந்தும் 'அவரது தழும்புகளால் நாம் குணமாகிறோம்' என அறியாமலிருப்பது பரிதாபமானது! பாவம் ஒரு வியாதி என தேவன் கருதவில்லையென்றால், சுகமாக்கப்படுதலைப் பற்றய பேச்சுக்கே இடமில்லை (பக்கம் 14). 'அவரது தழும்புகளால் குணமாகிறோம்' இது ஒரு தற்காலிகமான நிவாரணமன்று. உங்களது ஆத்துமாவை முழுமையாகக் குணமாக்கும் ஆரோக்கிய நிலையைக் கொண்டுவரும் மருந்தாகும் இது. ஆகவே இறுதியில் பரலோகத்திலுள்ள சிங்காசனம் முன்பாக பரிசுத்தர் கூட்டம் நடுவில் மனிதன் நின்று பலரோடும் இணைந்து, 'அவரது தழும்புகளால் நாம் குணமாகிறோம்' என பாடுவான். இரத்தம் சிந்தும் கிறிஸ்துவுக்கே மகிமை! எல்லா புகழும் மாட்சிமையும் ஆட்சியும் துதியும் அவருக்கே எப்போதும் உண்டாவதாக. பாவ வியாதியிலிருந்து விடுப்பட்ட யாவரும், 'ஆமேன், ஆமேன்' என்று சொல்வார்களாக! (பக்கம் 21).

'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்' (ஏசாயா 53:5).

வெறுமனே இவ்விஷயங்களை அறிந்திருப்பது உங்களை இரட்சிக்காது! நமது வேதபாடப் பகுதியில் வலியுறுத்தப்படும் கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்த உண்மைகள் உங்கள் உள்ளத்தை பற்றிப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் மனமாற்றம் அடைய முடியாது! இவ்வேத வசனங்கள் உங்கள் உள்ளத்தைப் பற்றிக் கொள்வதாக. இவ்வசனங்கள் உங்கள் ஆத்துமா கிறிஸ்துவை வாஞ்சிப்பதை உறுதிப்படுத்தட்டும்.

'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்' (ஏசாயா 53:5).

இவ்வசனங்கள் நீங்கள் கிறஸ்துவை நம்புவதை உறுதிசெய்வதாக, ஒவ்வொரு பாவத்திலுமிருந்து சுகமான நீங்கள், 'அவரது தழும்புகளால் ஒவ்வொரு பாவத்தின் வாதிப்பிலிருந்தும் நான் இப்போதும் எப்போதும் சுகமாக்கப்பட்டு விட்டேன்.' என்று கூறுங்கள். ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

போதகரால் பிரசங்கத்திற்கு முன் வாசிக்கப்பட்ட வேதபகுதி: ஏசாயா 52:13-53:5.
பிரசங்கத்திற்கு முன் பாடப்பட்ட தனிப்பாடல்:
திரு பெஞ்சமின் கின்னெய்ட் க்ரிஃபித் 'கோபாக்கினையின் பாத்திரம்'
(ஆல்பர்ட் மிட்லேன் 1825 – 1909).


முக்கிய குறிப்புகள்

காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, அடிக்கப்பட்ட இயேசு

(ஏசாயா 53ல் பிரசங்கம் எண் 6)
JESUS WOUNDED, BRUISED AND BEATEN
(SERMON #6 ON ISAIAH 53)

Dr. R. L. ஹைமர்ஸ், Jr.

'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்' (ஏசாயா 53:5)

(ரோமர் 1:21, 28)

I.   முதலாவதாக, கிறிஸ்துவானவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார், ஏசாயா 53:5a; சகரியா 12:10; யோவான் 19:34, 36, 37; லூக்கா 22:44; I பேதுரு 2:24.

II.  இரண்டாவதாக, நமது ஸ்தானத்தில் கிறிஸ்து ஆக்கினை அடைந்தார்,
ஏசாயா 53:5b; ரோமர் 3:24-25.

III. மூன்றாவதாக, தமது தழும்புகளின் மூலம் கிறிஸ்து நமது பாவத்தை குணமாக்குகிறார், ஏசாயா 53:5c; யோவான் 19:1; மத்தேயு 27:26; 20:18-19.