Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




கிறிஸ்து – அனைவராலும் குறைவாக மதிப்பிடப்பட்டவர்

(செய்தி எண்: 4 ஏசாயா 53)
CHRIST – UNIVERSALLY DEVALUED
(SERMON NUMBER 4 ON ISAIAH 53)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 16, 2013 அன்று சனிக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி.
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, March 16, 2013

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்; அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:3).


டாக்டர் எட்வர்ட் ஜே. யங் கூறுகிறார்,

ஏசாயாவால் முன்னுரைக்கப்பட்ட அதே அவிசுவாசம் இன்றளவும் நம்மிடையே காணப்படும் அவிசுவாசத்தைக் குறிக்கிறது. மனிதர்கள் அவரைக் [கிறிஸ்து] குறித்து சாதகமான நல்ல விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அவருடைய ஒழுக்கக் கோட்பாடுகளை, அவருடைய போதனைகளைப் போற்றி, அவர் நல்ல மனிதர் நல்ல தீர்க்கதரிசி எனவும், இன்றைக்கு உலகம் சந்திக்கும் சமுதாயப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு அவரே எனவும் அறிக்கையிடுவர். எனினும், அவர்கள் ஒருபோதும், தங்களைப் பாவிகள் என்றும், நித்தியத் தண்டனைக்குப் பாத்திரவான்கள் என்பதையும், கிறிஸ்துவின் பாடுமரணம் தங்களுக்கானது என்பதையும், அந்தப் பாவம் தேவ கோபாக்கினையை சாந்தப்படுத்தி பாவமுள்ள மனிதனை அவரோடு ஒருமுகப்படுத்தியது என்பதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தேவன் தம்முடைய குமாரனைக் குறித்து சொல்லுவதை மனிதன் ஏற்றுக்கொள்ளான். இன்றும், தாசர், [கிறிஸ்து] மனிதனால் அசட்டை பண்ணப்பட்டவராயும், புறக்கணிக்கப்பட்டவராயும், மனிதரால் குறைத்து மதிப்பிடப்படுகிறவராகவும் காணப்படுகிறார் (Edward J. Young, Ph.D., The Book of Isaiah, William B. Eerdmans Publishing Company, 1972, volume 3, p. 344).

லூத்தர் அவர்கள் ஏசாயா 53ஆம் அதிகாரம் வேதாகமத்தின் மையம் என்றார். அவர் சரியாகச் சொன்னார் என்று நினைக்கிறேன். அப்படி ஏற்றுக்கொள்வோமேயானால், நமது வேத பகுதி மிகவும் முக்கியமானதாகிறது. இந்த வேதபகுதி மனித முழுமையான சீர்கேட்டிற்கு அடிப்படையானதாக அமைகிறது. மனித “சீர்கேடு” என்னும் வார்த்தையை “ஒழுக்கக் கேடு” என்று அர்த்தங்கொள்கிறோம். “முழுமையான” என்னும் வார்த்தையை “முற்றிலும்” என்று அர்த்தங்கொள்கிறோம். நமது முதல் பெற்றோர் மூலமாக மனிதன் முற்றிலும் ஒழுக்கக்கேடுடையவனானான். ஹேடெல்பெர்க் விசுவாசப்பிரமாணம் உரைப்பது போல, மனிதனின் சீர்கேடு “பரதீசிலிருந்த, நமது முதற் பெற்றோராகிய, ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சி மற்றும் கீழ்ப்படியாமையிலிருந்து வருகிறது. இந்தப் பாவம் நமது சுபாவத்தை முற்றிலும் நச்சுப்படுத்திவிட்டது - நாம் கர்ப்பத்திலிருந்து உற்பவமாகும் போதே பாவியாகவே இருக்கும் படியாக” (The Heidelberg Catechism, Question seven). முழுமையான சீர்கேடு மனிதன் தேவன் மீது கொண்டுள்ள வெறுப்பில் காண்பிக்கப்படுகிறது,

“எப்படியென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு (விரோதமான) பகை” (ரோமர் 8:7).

இந்தப் பகை தேவ குமாரனாகிய, இயேசுவோடும் தொடர்கிறது. முழுமையான சீர்கேடு ரோம படையினர் ஏன் கீழ்கண்ட விதத்தில் செயல்பட்டனர் என விளக்குகிறது

“அவர் மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்” (மத்தேயு 27:30).

முழுமையான சீர்கேடு ரோம ஆளுநர் பிலாத்து ஏன் கீழ்கண்ட விதத்தில் செயல்பட்டார் என விளக்குகிறது

“இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்” (மத்தேயு 27:26).

இயேசு சிலுவையில் தொங்கி மரித்துக்கொண்டிருந்த போது மக்கள் ஏன் அவரை நோக்கி சத்தமாய் ஏளனம் செய்தார்கள் என்பதை முழுமையான சீர்கேடு விளக்குகிறது.

முழுமையான சீர்கேடு, இன்றளவும் ஏன்,

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்; அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3) என்பதை விளக்குகிறது.

I. முதலாவதாக, முமுமையான சீர்கேடு மனிதனால் இயேசு அசட்டை பண்ணப்படவும் புறக்கணிக்கப்படவும் காரணமாகிறது.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்…” (ஏசாயா 53:3).

இது உலகில் நாம் இன்றளவும் காண்கிறபடியே கிறிஸ்து பொதுவாக அசட்டை பண்ணப்படுவதற்கான காரணத்தை தெரிவிக்கிறது. அமேரிக்காவின் டைம் மற்றும் நியூஸ்வீக் பத்திரிக்கைகள் கிறிஸ்துமஸ் மற்றும் உயிர்த்தெழுதல் நாட்களில் வரும் தலைப்பு செய்திகளில் காணமுடிகிறது. இந்த பத்திரிக்கைகளில் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிறிஸ்துவைக் குறித்த காரியங்கள் எழுதப்படுகின்றன. ஆனால் அவை டாம்பீகமான கதைகளாக வருவதில்லை என உங்களுக்கு உறுதியாகக் கூற முடியும். அவை மத்திய கால இயேசுவின் சித்திரத்தை தலையங்கமாக பயன்படுத்துகின்றன. அவர் நிகழ்காலத்திற்கு ஏற்றவராக இல்லாமல் காலாவதியானவர் போன்ற தோற்றத்தை நவீன மனதிற்கு தோற்றுவிக்கிறது. நிச்சயமாக ஒரு காரணத்திற்காக அதைச் செய்வது உறுதி. அந்த செய்திகள் மிகத் தீவிரமான தாராளமய கொள்கை உடையவர்களால், இரட்சிப்படைய ஒரே மார்க்கமாகிய இயேசுவே, தேவனுடைய ஒரே பேறான குமாரன் என ஏற்றுக்கொள்ளாதவர்களால் எழுதப்படுகின்றன. பிரிட்டிஷ் பத்திரிக்கைகளிலும் உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளிலும் கிறிஸ்து இவ்வாறே பிரதிபலிக்கப்படுகிறார் என நிச்சயமாக அறிவேன். கிறிஸ்து நேரடியாக தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவும் சினிமா வாயிலாகவும் தாக்கப்படுகிறார்.

நீங்கள் படித்து வருகிற பள்ளி கல்லூரிகளில், உங்களுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள் கிறிஸ்துவைப் பற்றியோ அல்லது கிறிஸ்தவத்தைப்பற்றியோ சொல்வதற்கு நல்வார்த்தைகள் இல்லாதவராகவே இருப்பதை மாணவர்கள் அறிவீர்கள். கிறிஸ்துவும் அவரது போதனைகளும் தொடர்ந்து உங்கள் ஆசிரியர்களால் சிறுமைப்படுத்தப்படுவதை அறிந்திருக்கிறீர்கள்.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்” (ஏசாயா 53:3).

உங்கள் பள்ளி நண்பர்கள், உங்கள் உடன் வேலை செய்பவர்கள், கிறிஸ்துவின் நாமத்தை சாப வார்த்தையாக, அவரைத் தவறாகப் பேசுவதை தினசரி வழக்கமாய்க் கொண்டுள்ளனர்.

நீங்கள் இரட்சிக்கப்படாத குடும்பத்திலிருந்து வந்தவரானால், உங்களுக்கும் எந்த அடைக்கலமுமில்லை! உங்கள் இரட்சிக்கப்படாத பெற்றோர் இயேசுவைப் புறக்கணிப்பதை அசட்டை பண்ணுவதை நீங்கள் அறிவீர்கள். அநேகர் கிறிஸ்துவின் மீது தூஷண வார்த்தைகளையும் அவப்பெயரையும் குவிப்பதை அறிவீர்கள் - நீங்கள் அவரை விசுவாசித்து ஒரு நல்ல பாப்திஸ்து சபையின் அங்கமாயிருப்பதால் உங்கள் மீதும் சுமத்துவதை அறிவீர்கள். இவை அனைத்தும் விரோதம் நிறைந்த, சீர்கேடான இருதயத்திலிருந்து உருவாகிறது.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்” (ஏசாயா 53:3).

II இரண்டாவதாக, முழுமையான சீர்கேடு கிறிஸ்துவை பாடு அனுபவித்தவரும் துக்கம் நிறைந்தவருமாக வெளிப்படுத்துகிறது.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்…” (ஏசாயா 53:3).

கிறிஸ்துவுக்கு துக்கத்தையும் பாடுகளையும் கொண்டுவரக் காரணம் என்ன? உலகம் அவரை அசட்டை பண்ணி புறக்கணித்ததும் மட்டுமேயன்றி வேறு ஏதாக இருக்க முடியும்!

அவர் பூமியில் வாழ்ந்த நாட்களில் வேதபாரகரும், பரிசேயரும் பிரதான ஆசாரியரும் அவரைக் கடுமையாக விரோதித்தனர் அவரை எதிர்த்தனர், ஆகவே ஆத்தும வியாகுலத்துடன் கதறினார்:

“எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” (லூக்கா 13:34).

கிறிஸ்து துக்கத்தாலும் பாடுகளாலும் உடைக்கப்பட்டார், கெத்சமனே தோட்டத்தில், அவரை சிலுவையில் அடித்ததற்கு முந்தய இரவில் மனிதனின் பாவச்சுமை நிறைந்தவராய், காணப்பட்டார்,

“அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளி களாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).

ஆங்கே என் தேவன் என் எல்லா குற்றத்தை சுமக்க;
   இது விசுவாசத்தால் கிருபையின் மூலம் நம்பப்படும்;
ஆனால் அவர் அனுபவித்த கோரங்களோ
   எண்ணிக்கையில் அடங்காதவை.
ஒருவரும் உன் வழியே ஊடுருவ முடியாது
   புலம்பலின், இருள்சூழ் கெத்சமனே!
ஒருவரும் உன் வழியே ஊடுருவ முடியாது
   புலம்பலின், இருள்சூழ் கெத்சமனே!
(“Gethsemane” by Joseph Hart, 1712-1768; altered by the Pastor;
      to the tune of “Come, Ye Sinners”).

உன் பாவமே அல்லாமல், இந்த துக்கத்தாலும் பாடுகளாலும் கிறிஸ்து நிரப்பப்படக் காரணம் என்ன? உன்னுடைய விரோத மற்றும் எதிரான சீர்கேட்டு சுபாவத்தால், அவர் மேல் தேவ கோபாக்கினையை விழச் செய்ததும், உன்னுடைய பாவத்தைக் கெத்சமனேயில் இருந்து சிலுவைக்கு எடுத்துச் செல்ல வைத்ததும் அல்லவா, அவரை துக்கமும் பாடு அனுபவிப்பவராகவும் ஆக்கிற்று?

பாடுகள் நிறைந்த மனிதன் என்ன நாமம்
தேவ குமாரனாய் வந்தவற்கு
கெட்டுப்போன பாவிகள் மீட்படைய!
அல்லேலூயா! என்ன அருமை இரட்சகர்!
அவமானமும் குரூர பரியாசமும் சுமந்து,
என் ஸ்தானத்தில் ஆக்கினையடைந்து நின்றார்;
இரத்தத்தால் என் மன்னிப்பை முத்திரித்தார்;
அல்லேலூயா! என்ன அருமை இரட்சகர்!
   (“Hallelujah! What a Saviour!” by Philip P. Bliss, 1838-1876).

அவர் உன்னை பரத்திலிருந்து நோக்கும் போது, உன் உள்ளான சுபாவத்தில் கிறிஸ்துவுக்கு துக்கத்தையும் பாடுகளையும் கொண்டு வருவது என்ன? நீ, நீயே, அவரை அசட்டை பண்ணி புறக்கணிப்பதன் காரணத்தால் அவர் துக்கமும் பாடுகள் உடையவராகவும் இருக்கிறார். நீ அவரை நேசிப்பதாகச் சொல்லலாம். ஆனால் அவரை நம்ப முடியாத உன் நிலை நீ அவரை அசட்டை பண்ணி புறக்கணிப்பதையே காண்பிக்கிறது. உன் உள்ளான நிலையில் உண்மையுள்ளவனாயிரு! நீ அவரை மெய்யாகவே அசட்டை பண்ணி புறக்கணியாவிடில், நீ அவரை நம்ப முடியாததற்கு வேறு காரணம் என்னவாயிருக்கக் கூடும்? இந்த மாலையில் நீ அவரை நம்ப மறுக்கும் நிலை அவருக்குள் பெரிய வேதனையையும் வருத்தத்தையும் கொண்டு வருகிறது.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்…” (ஏசாயா 53:3).

III மூன்றாவதாக, முழுமையான சீர்கேடு மனித முகத்தினை தேவனுக்கு முன்பாக மறைக்கச் செய்கிறது.

நமது வேத பகுதியின் மூன்றாம் வரியைக் கவனியுங்கள்.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்; அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்…” (ஏசாயா 53:3).

டாக்டர். கில் அவர்கள் சொல்கிறார், “மேலும் விரும்பத்தகாதவரைப்போலவும் தீண்டத்தகாதவரைப்போலவும் அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவருக்கு விரோதமானவர்கள் போலவும், எதிர்க்கிறவர்களாகவும் அவரைப் பார்க்கும் போது பரிகசிப்புக்கு உரியவர் போலும், எந்த விதத்திலும் விரும்பத்தகாதவர் போலும் அவரை நோக்கினோம்” (John Gill, D.D., An Exposition of the Old Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume I, pp. 311-312).

மனிதனுடைய இயல்பான சீர்கெட்ட தோற்றப்படி, அவர்கள் தங்கள் முகங்களை கிறிஸ்துவை விட்டு மறைத்துக் கொள்கின்றனர். அவர்கள் ஒருவேளை டாக்டர். யங் சொல்வது போல, “அவரைக் குறித்து நல்ல காரியங்களைச் சொல்லலாம்… [ஆனால்] அவர்கள், தங்களைப் பாவிகள் என்றும், நித்திய தண்டனைக்குப் பாத்திரவான்கள் என்பதையும், கிறிஸ்துவின் மரணத்தின் வாயிலாகவே, தேவ நீதி சரிக்கட்டப்பட்டு தேவன் மனிதனோடு ஒப்புரவாகிறார் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. தேவன் தம்முடைய குமாரனைக் குறித்து சொல்லுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” (Young, ibid.).

கிறிஸ்தவமல்லாத மார்க்கங்கள் கிறிஸ்துவை முழுமையாக புறக்கணிக்கின்றன, அல்லது அவருக்கு “தீர்க்கதரிசி” அல்லது “போதகர்” என்னும் பட்டத்தைக் கொடுக்கின்றன. எனவே, அவர்கள் வேதத்தில் காண்பிக்கப்படும், மெய்யான கிறிஸ்துவைப் புறக்கணிக்கின்றனர். துர்உபதேசிகளும் மெய்யான கிறிஸ்துவைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் அடிப்படையான கிறிஸ்தவத்தை புறக்கணித்து அதனிடத்தில், மெய்யான கிறிஸ்துவுக்குப்பதிலாக “நாங்கள் பிரசங்கியாத, வேறே கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள்” ( 2 கொரிந்தியர் 11:4). “அநேகங் கள்ள கிறிஸ்துக்கள் எழும்புவார்கள்” என்று இயேசு இதைக் குறித்து முன்னுரைத்துள்ளார் (மத்தேயு 24:24). மெய்யான கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவே. மற்ற எல்லாக் கணிப்புகளும் “கள்ள கிறிஸ்துக்கள்”, அல்லது அப்போஸ்தலன் பவுல் சொல்வது போல, “நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசு”. மார்மனீயர்கள் தவறான இயேசுவை உடையவர்கள். யெகோவா சாட்சிகள் தவறான இயேசுவை உடையவர்கள். இன்றும் அநேக சுவிஷேச அமைப்புகளிலும் தவறான “ஆவி - கிறிஸ்து”, டாக்டர் மைக்கேல் ஹார்டன் தன் புத்தகத்தில் சொல்வது போன்ற “ஞானவாத கிறிஸ்து” உலவுகின்றார் Christless Christianity (Baker Books, 2008). தவறான கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களை பரிசுத்த வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவுக்கு முன்பாக மறைக்கின்றனர்.

குறிப்பாக சுவிசேஷ சபையார் மத்தியில் இது மெய்யாகிறது. டாக்டர். ஏ. டபுள்யூ. டோசர் என்னும் சுவிசேஷ எழுத்தாளர், இந்தக்கருத்தினை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்,

         நம்மத்தியில் அநேகம் கள்ள [தவறான] கிறிஸ்துக்கள் [சுவிசேசகர்கள்] இந்நாட்களில் தோன்றி உள்ளனர். ஜான் ஓவன் என்னும் பரிசுத்தவான், தன் நாட்களில் வாழ்ந்த மக்களை இவ்வாறு எச்சரித்தார்: “உங்களுக்குள்ளே கற்பனைக் கிறிஸ்து இருக்கிறார். இந்த கற்பனை கிறிஸ்துவால் திருப்தியடைந்தால் நீங்கள் கற்பனையான இரட்சிப்பில் திருப்தி அடைய வேண்டும்.”… ஆனால் ஒரே ஒரு மெய்யான கிறிஸ்து இருக்கிறார், அவரை தேவன் தம்முடைய குமாரன் என்கிறார்… இயேசுவின் தெய்வீகத்தினை ஏற்கும் அநேகருக்குள்ளே அவருடைய மனுஷீகத்தை ஏற்க மறுக்கும் நிலை இருக்கிறது. நாம் தீவிரமாய் ஒத்துக்கொள்ளும் சத்தியம் யாதெனில் கிறிஸ்து புவியில் நடந்த போது அவர் தேவன் மனிதனோடு என்றாலும், ஒரு சத்தியத்தை மேலோட்டமாக விட்டுவிடுகிறோம், அவர் இப்போது அமர்ந்திருக்கும் மத்தியஸ்த சிங்காசனத்தில் [மேலான பரலோகம்] அவர் தேவனோடு மனிதனாய் இருக்கிறார். புதிய ஏற்பாட்டு சத்தியம் யாதெனில் இப்போது, இதே வேளையில், நமக்காக தேவ சமுகத்தில் தோன்றும் மனிதன் பரலோகில் இருக்கிறார். இவர் மெய்யாகவே மோசே அல்லது ஆதாம் அல்லது பவுலைப்போல நிச்சயமாக மனிதர் தான். அவர் மகிமைப்படுத்தப்பட்ட மனிதன், ஆனாலும் அவரது மகிமைப்படுதல் அவருடைய மனுஷீகத்தை எடுத்துப் போட்டு விடவில்லை. இன்று அவர் மெய்யான மனிதர், மனித வர்க்கத்தின் மனிதர்.
         இரட்சிப்பு “செய்து முடிக்கப்பட்ட கிரியையை விசுவாசிப்பதாலோ” அல்லது “கிறிஸ்துவுக்காகத் தீர்மானம் செய்வதினாலோ” வருவதில்லை. [இரட்சிப்பு] இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் வருகிறது, அவர் முழுமையான, ஜீவனுள்ள, ஜெய கிறிஸ்து, தேவனாக மனிதனாக, நமது யுத்தத்தை நமக்காக செய்து வெற்றி பெற்றவர், நமது [பாவமென்னும்] கடனை ஏற்றுக் கொண்டு அவைகளால் மரித்து உயிர்த்தெழுந்து நம்மை விடுதலையாக்கினார். இதுவே மெய்யான கிறிஸ்து, மற்ற எந்த குறைவும் அதற்கு ஈடல்ல (A. W. Tozer, D.D., “Jesus Christ is Lord,” Gems From Tozer, Christian Publications, 1969, by permission of Send the Light Trust – 1979, pp. 24, 25).

மனித இயல்பான சீர்கெட்ட இருதயம் மெய்யான கிறிஸ்துவிடம் இருந்த தங்கள் முகங்களை மறைக்கச் செய்கிறது.

“அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்…” (ஏசாயா 53:3).

IV. நான்காவதாக, முழுமையான சீர்கேடு மனிதன் கிறிஸ்துவை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.

நமது வேத பகுதியின் முடிவை, மூன்றாம் வசனத்தில் பாருங்கள். “அவர் அசட்டை…” என்று துவங்கும் இந்த கடைசிப் பத்தியை நாம் எழுந்து நின்று சத்தமாய் வாசிப்போம்.

“அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:3).

நீங்கள் அமர்ந்து கொள்ளலாம். “அவரை எண்ணாமற்போனோம்” என்னும் இந்த வார்த்தையிலிருந்து பேசிய ஸ்பர்ஜன் என்னும் “பிரசங்கிகளின் பிரபு” சொன்னார்,

இதுவே முழு உலகத்தின் எல்லா மக்களின் அறிக்கையாக இருக்க வேண்டும். மிகப்பெரிய பேரரசன் துவங்கி மிகவும் தாழ்வான ஏழை வரைக்கும், மிகச் சீரிய சிந்தனையாளிலிருந்து மிக தாழ்வான மனநிலை உள்ளவன் வரைக்கும், எல்லாராலும் புகழப்படுபவன் துவங்கி ஒருவரும் அறியாத சிறியவன் வரைக்கும், இந்த ஒரு அறிக்கை வெளிப்பட வேண்டும்: “அவரை எண்ணாமற்போனோம்”… பரிசுத்தவான்களில் தேறியவர்கள் கூட… அவரை ஒருக்காலத்தில் “எண்ணாமற் போனார்கள்”… ஒரு நேரத்தில் “அவரை எண்ணாமற்போனார்கள்” [அவர்கள் இரட்சிப்படையும் முன்பு]” (C. H. Spurgeon, “Why Christ is Not Esteemed,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1978 reprint, volume LIII, p. 157).

“கிறிஸ்து ஏன் எண்ணப்படவில்லை” என்னும் அதே பிரசங்கத்தில், இழந்து போன இந்த உலகம் ஏன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன் இரட்சிக்கப் படாதவர்கள் கிறிஸ்துவின் முக்கியத்தை உணர்வதில்லை, ஏன் அவரை உயர்வாக மதிப்பதில்லை, ஏன் அவருக்கு கனம் செலுத்தி அவரை ஆராதிப்பதில்லை என்பதற்கு ஸ்பர்ஜன் நான்கு காரணங்களைக் கூறுகிறார். இரட்சிப்பில்லாதவர்கள் அவரை எண்ணாமற்போவதற்கு ஸ்பர்ஜன் தந்த நான்கு காரணங்கள்:

(1) மனிதர்கள் அவரை மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள் தங்களைத் தாங்களே அதிக மதிப்பீடு செய்கிறார்கள். “சுய மதிப்பு”, ஸ்பர்ஜன் சொல்கிறார், “இயேசுவைப் புறம்பாக்குகிறது… எந்த அளவு அதிகமாக சுய மதிப்பு வளர்கிறதோ அந்த அளவு கிறிஸ்துவிற்கான வாசலை [பூட்டி] அடைத்துப்போடுகிறோம். சுய சிநேகம் இரட்சகரின் சிநேகத்திலிருந்து நம்மை தடுத்து விடுகிறது”.

(2) மனிதர் அவரை மதியாத காரணம் உலகை மிக அதிகமாக மதிக்கின்றனர். ஸ்பர்ஜன் சொல்கிறார், “நாம் அவரை எண்ணாமற்போனதற்குக் காரணம் உலகத்தையும் அதன் மூடத்தனத்தினையும் நாம் நேசித்தோம்.”

(3) மனிதர்கள் அவரை மதிப்பதில்லை ஏனெனில் அவர்கள் அவரை அறியவில்லை. ஸ்பர்ஜன் சொல்கிறார், “கிறிஸ்துவைப் பற்றி அறிவதற்கும் கிறிஸ்துவை அறிவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது… கிறிஸ்துவை தவறாக நினைப்பவர்கள் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை… ‘நாம் அவரை எண்ணாமற்போனோம்’ காரணம் நாம் அவரை அறியவில்லை”.

(4) மனிதர்கள் அவரை மதிப்பதில்லை ஏனெனில் அவர்கள் ஆவிக்குரிய நிலையில் மரித்துப் போனவர்கள். ஸ்பர்ஜன் சொல்கிறார், “நாம் அவரை எண்ணாமற் போனது ஆச்சரியமில்லை ஏனெனில் நாம் ஆவிக்குரிய நிலையில் மரித்துப்போயிருந்தோம்… நாம் ‘பாவத்தினாலும் அக்கிரமத்தினாலும்’ மரித்துப் போயிருந்தோம். கல்லறையில் இருந்த லாசருவைப் போலவே, நாம் காலம் கடக்க அதிகமதிகமாய் கறைப்பட்டுப்போனோம்”.


இந்த காரணங்களை ஸ்பர்ஜன் சொல்லி மனிதன் இதனால் தான் இரட்சகரை ஏற்கவில்லை என்கிறார், ஏனெனில் அவர்கள் அவரில் மதிப்பைக் காணவில்லை. ஒருவேளை, இந்த வசனம் உங்களுக்கும் பொருந்துமோ என ஐயப்படுகிறேன்?

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்; அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:3).

இந்தச் செய்தியின் வார்த்தைகள் உங்கள் சீர்கேட்டை உணர்த்துவதாக கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்புக்கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறதா? கிறிஸ்துவை எண்ணாமற்போகும் மற்றும் புறக்கணிக்கும், உங்கள் இருதயத்தின் சீர்கேட்டை உணர்கிறீர்களா? அப்படிப்பட்ட உணர்வு உங்களில் எழுமானால், அது தேவனுடைய கிருபையின் நிமித்தமே என்பதை உணர்த்த விரும்புகிறேன். ஜான் நியூட்டன் சொல்வது போல,

ஆச்சரிய கிருபை! என் இனிய சப்தம்
     மா பாவி என்னை இரட்சித்தது!
முன்புதொலைந்திருந்தேன், இப்போதோ கண்டுபிடிக்கப்பட்டேன்
     முன்பு குருடன் ஆனால் இப்போதோ காண்கிறேன்.
கிருபை என் இருதயத்திற்கு பயம் கற்பித்தது
     கிருபையால் என் பயம் புறம்பானது
என்ன விலையேறப்பெற்ற கிருபையின் தோற்றம்
     நான் இரட்சிப்படைந்த நேரம்!
(“Amazing Grace” by John Newton, 1725-1807).

உங்கள் கடின இருதயம் கிறிஸ்துவுக்கு நேராய்த் திறவாதிருந்தால், கிறிஸ்துவை வெறுப்பதில் உங்களில் இருக்கும் சீர்கேட்டை உணர்வீர்களானால், உங்களை அவருக்கு அர்ப்பணிப்பீர்களா? உலகம் வெறுக்கிற புறக்கணிக்கிற, கிறிஸ்துவை நம்புவீர்களா? நீங்கள் கிறிஸ்துவை நம்புவீர்களானால், அவருடைய இரத்தத்தினாலும் நீதியைக்கொண்டும் உங்கள் பாவத்திலிருந்தும் நரக ஆக்கினையிலிருந்தும் உடனடியாக இரட்சிக்கப்படுவீர்கள். ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் போதகர் வாசித்த வேத பகுதி: ஏசாயா 52:13 - 53:3.
பிரசங்கத்திற்கு முன்னால் தனிப்பாடல் பாடியவர் திரு. பென்ஜமின் கினாசிட் கிரிஃபித்: “Amazing Grace” (by John Newton, 1725 – 1807).


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்து – அனைவராலும் குறைவாக மதிப்பிடப்பட்டவர்

(செய்தி எண்: 4 ஏசாயா 53)
CHRIST – UNIVERSALLY DEVALUED
(SERMON NUMBER 4 ON ISAIAH 53)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்; அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:3).

(ரோமர் 8:7; மத்தேயு 27:30, 26)

I. முதலாவதாக, முமுமையான சீர்கேடு மனிதனால் இயேசு அசட்டை பண்ணப்படவும் புறக்கணிக்கப்படவும் காரணமாகிறது. ஏசாயா 53:3அ.

II. இரண்டாவதாக, முழுமையான சீர்கேடு கிறிஸ்துவை பாடு அனுபவித்தவரும் துக்கம் நிறைந்தவருமாக வெளிப்படுத்துகிறது. ஏசாயா 53:3ஆ; லூக்கா 13:34; 22:44.

III. மூன்றாவதாக, முழுமையான சீர்கேடு மனித முகத்தினை தேவனுக்கு முன்பாக மறைக்கச் செய்கிறது. ஏசாயா 53:3இ; 2 கொரிந்தியர் 11:4; மத்தேயு 24:24.

IV. நான்காவதாக, முழுமையான சீர்கேடு மனிதன் கிறிஸ்துவை குறைத்து மதிப்பிடச் செய்கிறது. ஏசாயா 53:3ஈ.