Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஆட்டுக்குட்டியானவரின் மௌனம்

(செய்தி எண்: 8 ஏசாயா 53)
THE SILENCE OF THE LAMB
(SERMON NUMBER 8 ON ISAIAH 53)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 24, 2013 அன்று கர்த்தருடைய நாளில் மாலை வேளையில் லாஸ்
ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 24, 2013

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).


கிறிஸ்தவ இரத்த சாட்சிகளின் கடைசி வார்த்தைகள் எப்போதும் சவால் நிறைந்தவை. அவர்களது மரண நேர வார்த்தைகள் நமது இருதயங்களை உயிர்ப்பிக்கின்றன. பாலிகார்ப் இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த பிரசங்கியார். ஆங்கிலத்தில் அவரது பெயர் பாலிகார்ப், லத்தீனில் அவரது பெயர் பாலிகார்பஸ். அப்போஸ்தலன் யோவானின் சீடராய் இருந்தவர் பாலிகார்ப். அநேக வருடங்கள் கழித்து அவர் புறஜாதி நீதிபதி முன்பதாக நின்றார், அந்த நீதிபதி, “நீர் ஒரு வயோதிபர். நீர் மரிக்க வேண்டிய அவசியமில்லை… வாக்குப்பண்ணிவிடும் நான் உம்மை விடுவிப்பேன். ‘அதிபர் சீசர்’ என்று சொல்லி, அவருக்கு தூபம் காட்டுவதால் என்ன தீங்கு நேரப்போகிறது? சீசரின் நாமத்தில் வாக்குப்பண்ணிவிடும் நான் உம்மை சந்தோஷமாய் விடுவித்துவிடுவேன். கிறிஸ்துவை மறுதலியும் நீர் உயிர்வாழ்வீர்.”

பாலிகார்பஸ் பதிலளித்தார், “எண்பத்தாறு ஆண்டுகள் அவரை [கிறிஸ்து] நான் சேவித்திருக்கிறேன், அவர் எனக்கு ஒருபோதும் தவறு செய்ததில்லை. என்னை இரட்சித்த என் இராஜாவை நான் எப்படி தூஷிப்பேன்?” நீதிபதி சொன்னார், “நான் உம்மை அக்கினியில் தகனிக்க வேண்டியிருக்கும்.” பாலிகார்பஸ் பதிலாக, “நீர் என்னிடம் பயமுறுத்தும் அக்கினி ஒரு மணி நேரம் மட்டுமே எரிந்து அவிந்து போய் விடும். பக்தியில்லாதவருக்காக [இழந்து போனவர்கள்] வரப்போகிற நியாயத்தீர்ப்பின் நித்திய அக்கினியைப் பற்றி உமக்குத் தெரியுமா? ஏன் தாமதிக்கிறீர்? வாரும், நீர் விரும்புகிறதைச் செய்யும்.”

இதைக் கேட்ட நீதிபதி தன் தூதுவனை அனுப்பி மக்களிடம் சத்தமாய், “பாலிகார்ப் தன்னை ஒரு கிறிஸ்தவனென்று அறிக்கை பண்ணினான்!” என்று பிரகடனம் செய்ய அனுப்பினான். புறஜாதி மக்கள் இதைக் கேட்டு, “அவனை உயிரோடே எரியுங்கள்!” என்று உரக்கக் கத்தினர். தீ ஆயத்தமாக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றுகிறவன் அவரிடம் வந்து அவரை ஒரு தூணில் ஆணிகளால் அறைந்துவிடும்படி வந்தான். பாலிகார்ப் அமைதியாக சொன்னார், “என்னை இப்படியே விட்டுவிடுங்கள். நீர் ஆணிகளால் எதிர்பார்க்கும் பாதுகாப்பை விட, அக்கினியை சகிக்க உதவி செய்பவர் அசையாமல் அக்கினியில் நிற்க என்னை வலுப்படுத்துவார்”.

இதற்குப் பின்பு பாலிகார்ப் உரத்த சத்தமாய் ஜெபித்து, “மரணத்திற்கு பாத்திரனாய் எண்ணின” தன் தேவனை துதித்தார். அக்கினி எரிய விடப்பட்டு அக்கினி ஜுவாலை அவரை வளைந்து கொண்டது. அக்கினியால் அவரது சரீரம் தளர்ந்துவிடாததைக் கண்ட போது, ஒரு சேவகன் ஈட்டியினால் அவரைக் குத்தினான். இவ்வாறு சிமிர்னா சபையின் போதகனும், அப்போஸ்தலன் பவுலின் சீடனுமான பாலிகார்ப்பஸின் வாழ்வு முடிவுக்கு வந்தது. (see James C. Hefley, Heroes of the Faith, Moody Press, 1963, pp. 12-14).

ஸ்பர்ஜன் “ஜேன் பவுச்சியர் என்னும் நமது மகிமையான பாப்திஸ்து இரத்த சாட்சி… கிரான்மர் மற்றும் ரிட்லி” என்னும் இரண்டு இங்கிலாந்து பேராயர்களுக்கு முன்பாக நிறுத்தப்பட்டதைக் குறித்து பேசுகிறார். அவர்கள் இந்த சகோதரியை அக்கினியால் சுட்டெரிக்கப்பட ஒப்புக்கொடுத்து அவ்வாறு செய்வது சுலபமான மரணம் என்றனர். அவள் அவர்களைப் பார்த்து, “உங்களைப் போலவே நானும் இயேசுவின் உண்மையான ஊழியக்காரி தான்; உங்கள் எளிய சகோதரியை அக்கினியால் அவித்துப் போடுவீர்களானால், பார்த்துக் கொள்ளுங்கள் [எச்சரிக்கையாயிருங்கள்] தேவன் ரோமிலிருந்து நரியை அவிழ்த்து விட்டு, நீங்களும் பாடுபட வேண்டியதாயிராதபடிக்கு ஜாக்கிரதை காண்பியுங்கள்” என்றாள். அவள் எவ்வளவு உண்மையாய் சொன்னாள், அந்த இருவரும் சில காலத்திற்குப் பின்பு இரத்த சாட்சிகளாய் மாறினர்! (see C. H. Spurgeon, “All-Sufficiency Magnified”, The New Park Street Pulpit, volume VI, pp. 481-482).

அநேக நூற்றாண்டு இடைவெளிகளுக்கு மத்தியிலும், பாலிகார்ப் மற்றும் ஜேன் பவுச்சியர் விசுவாசத்தில் உறுதியை அறிக்கையிட்டு தீக்கிரையாயினர். ஆனால் இயேசுவோ துன்புறுத்தல் மற்றும் மரணத்திற்கு மத்தியில் அவ்வாறு அறிக்கையிடவில்லை! ஆம், அவர் பிரதான ஆசாரியனிடம் பேசினார். ஆம், அவர் ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்துவிடம் பேசினார். ஆனால் அவர் சவுக்கடிகளால் குற்றுயிராக்கப்படும்போதும் சிலுவையில் அறையப்படும்போதும், ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் அவரது மௌனம் என்னும் அற்புத உண்மையை விளக்குகிறது!

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).

அவர்கள் அவரை அடிக்கும்போதும் அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை! அவரை சிலுவையில் ஆணிகளால் அறையும் போதும் அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை! நமது வேத பகுதிக்கு வந்து மூன்று கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் சொல்லும் வாயிலாக அதன் ஆழத்திற்குள் கடந்து செல்வோம்.

I. முதலாவதாக, இயேசு என அழைக்கப்படும் இந்த மனிதன் யார்?

யாரைக் குறித்து தீர்க்கதரிசி இவ்வாறு பேசினான்,

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை…?” (ஏசாயா 53:7).

வேதாகமம் சொல்கிறது அவர் மகிமையின் கர்த்தர், பரிசுத்த திரித்துவத்தின் இரண்டாம் நபர், மனித சரீரத்தில் வந்த தேவகுமாரன்! விசுவாசப் பிரமாணம் சொல்வது போலவே அவர் “தெய்வீகத்தின் தெய்வீகமானவர்”. ஒரு சாதாரண மனிதனாகிய போதகர் எனவோ அல்லது சாதாரண தீர்க்கதரிசி எனவோ நாம் அவரை நினைக்கக் கூடாது! இவ்வாறு அவரைக் குறித்து சிந்திக்க அவர் இடமளிக்கவில்லை, அவர் சொன்னார்,

“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30).

மறுபடியும், அவர் சொன்னார்,

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” (யோவான் 11:25).

வேறு எந்த மனிதனும் இவ்வாறு சொல்லியிருந்தால் நாம் அந்நபரை பிசாசு பிடித்தவனெனவும், பைத்தியக்காரனெனவும், திசை மாறியவனெனவும், மூளை குழம்பியவனெனவும் அல்லது நிலை குலைந்தவனென்றும் சொல்லியிருப்போம்! ஆனால் இயேசு தானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொன்ன போதும், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று சொன்ன போதும், நாம் சற்று யோசித்து, நம்மில் மோசமானவர்கள் கூட, அவர் சொல்வது சரியா என யோசிப்போம்!

சி.எஸ். லூவிஸ் சொல்லும் சில காரியங்களில் நான் மாறுபட்டாலும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவர் சொன்ன பிரசித்த பெற்ற வார்த்தைகளை நாம் எப்படி மறுக்க இயலும்? சி.எஸ். லூவிஸ் சொன்னார்,

அவரைக் குறித்து ஜனங்கள் சொல்லும் உண்மையிலேயே முட்டாள்தனமான காரியங்களை ஒருவரும் சொல்லாதபடி இங்கே தடை செய்ய முயற்சிக்கிறேன்: “இயேசுவை பெரிய ஒழுக்கரீதியான போதகர் என்று ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் தன்னை தேவன் என்று சொல்வதை ஏற்க முடியாது”. இந்த ஒரு காரியத்தைத்தான் நாம் சொல்லக்கூடாது. சாதாரணமான ஒரு மனிதனாய் இருந்து இயேசு சொன்னது போன்ற காரியங்களை சொன்னவர் ஒழுக்கரீதியான போதகர் என்று சொல்ல முடியாது. அவர் ஒருவேளை பைத்தியக்காரனைப்போல - தன்னை ஓடில்லாத முட்டை என்று சொல்பவனாகவோ - அல்லது அவர் நரகத்தின் பிசாசாய் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தெரிவை செய்ய வேண்டும். ஓன்று அவர் அப்போதும் இப்போதும் தேவ குமாரன்: அல்லது பைத்தியக்காரன் அல்லது அதற்கும் மோசமானவன். நீங்கள் அவரை முட்டாள் என்று அடைத்துப்போடலாம், நீங்கள் அவர் மீது துப்பி அவரை பிசாசு என்று கொன்று போடலாம்; அல்லது நீங்கள் அவர் பாதத்தில் வீழ்ந்து அவரை கர்த்தர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கலாம். ஆனால் அவரை ஏதோவொரு மனித போதகரெனக் கூறும் முட்டாள்தனத்திற்கு உட்படாமலிருப்போமாக. அவர் அவ்வாய்ப்பை நமக்குத் திறந்து வைக்கவில்லை. அவ்வாறு அவர் நினைக்கவில்லை (C. S. Lewis, Ph.D., Mere Christianity, Harper Collins, 2001, p. 52).

“நீங்கள் அவர் மீது துப்பி அவரை பிசாசு என்று கொன்று போடலாம்; அல்லது நீங்கள் அவர் பாதத்தில் வீழ்ந்து அவரை கர்த்தர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கலாம்... உங்கள் தெரிந்து கொள்ளுதலை நீங்கள் தான் செய்ய வேண்டும்”, இயேசு சொன்னார்,

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

இங்கே அனைத்தும் சொல்லப்பட்டாயிற்று! நீங்கள் இயேசுவை புத்தமதத்துடனோ அல்லது இந்து மதத்துடனோ அல்லது இஸ்லாமிய மதத்துடனோ கலக்கமுடியாது ஏனெனில் “அவர் அவ்வாய்ப்பை நமக்குத் திறந்து வைக்கவில்லை. அவ்வாறு அவர் நினைக்கவில்லை”. இயேசு நமக்கு வேறொரு மார்க்கத்தையும் வைக்கவில்லை. அவர் சொன்னார், “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. சி.எஸ். லூவிஸ் சொல்வது போல “நீங்கள் அவர் மீது துப்பி அவரை பிசாசு என்று கொன்று போடலாம்… அல்லது நீங்கள் அவர் பாதத்தில் வீழ்ந்து அவரை கர்த்தர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கலாம்… உங்கள் தெரிந்து கொள்ளுதலை நீங்கள் தான் செய்ய வேண்டும்”. இது அல்லது வேறே. ஒருவரும் நிச்சயமாக இதில் நடுநிலையில் இருப்பதில்லை! அவ்வாறு இருப்பது போல அவர்கள் நடிக்கலாம், அவர்கள் ஒருபோதும் நடுநிலையாளர்கள் இல்லை. “அவர் அவ்வாய்ப்பை நமக்குத் திறந்து வைக்கவில்லை”.

II. இரண்டாவதாக, ஏன் இயேசு தன்னை துன்புறுத்திக் கொலை செய்தோறுக்கு முன்பாக தன்னைப் பாதுகாக்கவில்லை?

அதற்கு காரணம் என்ன?

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை?” (ஏசாயா 53:7).

மிகப்பெரிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கிறிஸ்தவரல்லாதிருந்தும், இவ்வாறு சொன்னார்,

ஒருவரும் [நான்கு] சுவிசேஷங்களை வாசித்துவிட்டு இயேசுவின் பிரசன்னத்தை உணராமல் இருக்க முடியாது. ஓவ்வொரு வார்த்தையிலும் அவரது ஆள்தத்துவம் வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட வாழ்வில் எந்த ஒரு புனைகதையும் நிரம்பியில்லை (Albert Einstein, Ph.D., The Saturday Evening Post, October 26, 1929).

எனினும் அவர் சவுக்கடி பெறும் போதும் சிலுவையில் அடிக்கப்படும் போதும் ஒன்றும் பேசவில்லை! அவரை அடித்து கொலை செய்தவர்களுக்கு முன்பாக இயேசு ஏன் தன்னைத் தற்காத்துக் கொள்ளவில்லை? ரூஸோ என்னும் பிரெஞ்சு தத்துவ ஞானி, ஒரு நாத்திகனாயிருந்தும், விநோதமாக அந்த கேள்விக்கான பதிலுக்கு அருகே வந்து இவ்வாறு உரைத்தார்,

சாக்ரடீஸ் வாழ்ந்து தத்துவ ஞானி போல மரித்தால், இயேசு தேவனைப் போல வாழ்ந்து மரித்தார் (Jean-Jacques Rousseau, French philosopher, 1712-1778).

இயேசு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாததற்குக் காரணம் இவர் பூமிக்கு வந்ததன் காரணமே பாடுபட்டு சிலுவையில் மரிப்பதற்காகத்தான். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பதாக இதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

“அது முதல் இயேசு [அந்த காலம் முதல்], தாம் எருசலேமுக்குப் போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்” (மத்தேயு 16:21).

The Applied New Testament விளக்கஉரை சொல்லுகிறது,

பேதுரு தற்போதுதான் இயேசுவை கிறிஸ்து என்றும், மேசியா என்றும், ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்றும் அறிக்கை செய்திருக்கிறார் [மாற்கு 8:29]. ஆனால் [பேதுரு] இன்னமும் இயேசு எதற்காக இந்த உலகிற்கு வந்தார் என்று புரிந்து கொள்ளவில்லை. அவரும் மற்ற யூதரைப் போலவே, குறிப்பாக, இயேசு பூமிக்குரிய இராஜாவாக வந்ததாக நினைத்தார். ஆகவே, இயேசு [தாம்] பலவகையில் பாடுபட்டு... கொல்லப்பட வேண்டும் என்று சொன்ன போது, பேதுருவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வாறு சொன்னதற்காக அவன் இயேசுவைக் கடிந்து கொண்டான். இயேசு மூன்றாம் நாளிலே [தாம்] உயிருடன் எழும்பப் போவதையும் சொல்லியிருந்தார். தாம் மரிக்கப்போவது மட்டுமல்ல, மூன்றாம் நாளிலே மரித்ததிலிருந்து உயிர்த்தெழப்போவோம் என்றும் இயேசுவுக்குத் தெரியும். சீஷர்கள் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை (Thomas Hale, The Applied New Testament Commentary, Kingsway Publications, 1996, pp. 260-261).

ஆனால் நாமோ இதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதாகமம் சொல்லுகிறது,

“பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார்” (1 தீமோத்தேயு 1:15).

நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், ஆகியவை நமக்கு ஜீவன் தருகின்றன. இயேசு அடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்படும்போது தம்மைக் காத்துக்கொள்ளும்படி தம் வாயைத் திறக்கவில்லை காரணம், அவர் பிலாத்துவிடம் சொன்னது தான், “சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன்” (யோவான் 18:37).

III. மூன்றாவதாக, இயேசுவின் அமைதியான பாடுகளைக் குறித்து நமது வேதபகுதி என்ன சொல்கிறது?

தயவு செய்து எழும்பி ஏசாயா 53:7ஐ சத்தமாய் மீண்டும் ஒருவிசை வாசிக்கலாம்.

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற [மௌனம்] ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).

நீங்கள் அமர்ந்து கொள்ளலாம்.

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்”. டாக்டர் யங் இந்த வசனம் இவ்வாறு மொழிபெயர்க்கலாம் என உரைக்கிறார், “அவர் ஒடுக்கப்பட தம்மை [அனுமதித்திருந்தார்]”. “ஒடுக்கப்படுதலில் அவர் தாமே முன்வந்து பாடுகளை ஏற்றுக்கொண்டார்... சுயகாப்பு அல்லது மறுப்பு அவர் வாயிலிருந்து புறப்படவில்லை. இதன் நிறைவேறுதலை யோசிக்காமல் [இந்த தீர்க்கதரிசனத்தை] ஒருவராலும் வாசிக்க முடியாது, பிலாத்துவின் நியாயாசானத்திற்கு முன்பாக உண்மையான ஊழியக்காரனாகிய அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ‘அவர் வையப்படும்போது, பதில்வையவில்லை’ [துன்புறுத்தப்பட்ட போது, அவர் பயமுறுத்திப் பேசவில்லை]” (Edward J. Young, Ph.D., The Book of Isaiah, Eerdmans, 1972, volume 3, pp. 348-349).

“பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான் [மிகவும் பிரமித்தான்]” (மத்தேயு 27:13-14).

“பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள்: அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான் [மிகவும் அதிசயப்பட்டு பிரமித்தான்]” (மாற்கு 15:3-5).

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற [மௌனம்] ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).

ஏசாயா 53:7ல் கிறிஸ்து ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிடப்பட்டுள்ளார். பழைய ஏற்பாட்டில், மனிதர்கள் தேவனுக்கு முன்பாக பலியிடும்படி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வருவர். ஆட்டுக்குட்டியை பலிக்கு ஆயத்தம்பண்ணும் விதமாக அதன் ரோமங்களை கத்தரித்து, எல்லா முடியையும் எடுத்து விடுவர். அதைச் செய்யும் வேளையில் ஆடு அமைதியாக நின்றது. பலி செலுத்தப்படும் ஆட்டுக்குட்டியானது மயிர்க்கத்தரிக்கப்படும்போதும் கொல்லப்படும்போதும் அமைதி காத்தது போல, “அவரும் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).

யோவான் ஸ்நானகனும் இயேசுவை பலி செலுத்தப்படும் பலியைப் போல ஒப்பிட்டுப் பேசினான்,

“இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29).

நீங்கள் கிறிஸ்து இயேசுவை விசுவாசித்தீர்களானால், அவரது சிலுவை பலி உங்கள் பாவத்திற்கான கிரயத்தை செலுத்திவிடுகிறது, நீங்கள் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நிற்கிறீர்கள். உங்களுடைய குற்றம் சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் சரிக்கட்டப்பட்டு விட்டது. அங்கே சிந்தப்பட்ட இரத்தத்தினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

அமெரிக்க இந்தியர்களின் மிஷனரியான டேவிட் பிரைனார்டு, இந்த சத்தியத்தை தன் ஊழியத்தின் நாட்களில் அதிகம் பகிர்ந்தார். அவர் அமெரிக்க இந்தியர்களுக்கு பிரசங்கிக்கும் வேளையில், அவர் சொன்னார், “இயேசுவையும் சிலுவையில் அறையப்பட்ட அவரையும் விட்டு நான் விலகவே இல்லை. இந்த மகத்தான சத்தியத்தை இந்த ஜனங்கள் புரிந்து கொண்ட உடனே... கிறிஸ்து நமக்காக பலியானதன் அர்த்தத்தை பெற்றுக்கொண்டால், அவர்களது வாழ்க்கை முறைகளை மாற்றுவது குறித்து நான் அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை” (Paul Lee Tan, Th.D., Encyclopedia of 7,700 Illustrations, Assurance Publishers, 1979, p. 238).

அது இன்றும் உண்மையாகிறது என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் இந்த காரியத்தைப் பார்க்கும் போது

“வேத வாக்கியங்களின்படியே கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்” (1 கொரிந்தியர் 15:3),

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகருக்கு உங்களை அர்ப்பணிக்கும் போது, நீங்கள் கிறிஸ்தவராகிறீர்கள். மற்ற அனைத்தும் விளக்குவதற்கும் புரிந்து கொள்வதற்கும் எளியவையே. கிறிஸ்துவை விசுவாசத்தினால் நம்புங்கள் நீங்கள் இரட்சிப்படைவீர்கள்!

ஸ்பர்ஜனின் மரணப் படுக்கையில் இவ்வாறு சொன்னார், “என்னுடைய இறையியல் நான்கு சிறிய வார்த்தைகளில் அடக்கம் - ‘இயேசு கிறிஸ்து எனக்காக மரித்தார்’. நான் மறுபடியும் எழுந்திருந்தால் இதை மட்டும் பிரசங்கிக்கப் போதுமானது அல்ல, ஆனால் இதற்காக என் ஜீவனையும் கொடுக்கலாம். இயேசு எனக்காக மரித்தார்” (Tan, Ibid.). நீங்கள் அதைச் சொல்வீர்களா? “இயேசு எனக்காக மரித்தார்”, என்று நீங்கள் சொல்வீர்களா? இல்லையெனில், உயிர்த்தெழுந்த இரட்சகருக்கு உங்களை அர்ப்பணித்து அவரை இன்றிரவு நம்புவீர்களா? “இயேசு எனக்காக மரித்தார், நான் என்னை அவருக்கு அர்ப்பணித்து அவருடைய இரத்தத்தினாலும் நீதியினாலும் வரும் முழுமையான இரட்சிப்பினை நம்புகிறேன்” என்று சொல்வீர்களா? தேவன் அதைச் செய்வதற்கான எளிமையான விசுவாசத்தை உங்களுக்குத் தருவாராக. ஆமென்.

தயவு செய்து எழுந்து நின்று உங்கள் கையிலுள்ள தாளில் பாமாலை எண் 6 ஆகிய சார்லஸ் வெஸ்லியின் “And Can It Be?” என்று துவங்கும் பாடலைப் பாடுவோம்.

இரட்சகரின் இரத்தத்தில் ஆர்வம் பெற
   என்னால் எப்படி ஆகுமோ?
மரித்தார் எனக்காய் அவர், அவருடைய வேதனை வருவித்ததாரோ?
   எனக்காகவோ, அவர் மரணம்வரை பின் தொடர்ந்தார்?
ஆச்சரியமான அன்பு! இது எப்படி ஆகும்,
   என் ஆண்டவரே, நீர் எனக்காய் மரிப்பதென்பது?
ஆச்சரியமான அன்பு! இது எப்படி ஆகும்,
   என் ஆண்டவரே, நீர் எனக்காய் மரிப்பதென்பது?
(“And Can It Be?” by Charles Wesley, 1707-1788).

இயேசு உங்கள்பாவத்தை மன்னித்து உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லவர் என்று நீங்கள் நிச்சயித்துக் கொண்டீர்களானால், நீங்கள் கிறிஸ்தவராவது குறித்து உங்களோடு பேச விரும்புகிறோம். தயவு செய்து உங்கள் இருக்கையில் இருந்து எழுந்து இந்த அறையின் பின்புறம் செல்லுங்கள். நாம் பேசும்படியாக ஒரு அமைதியான அறைக்கு டாக்டர் கேஹன் உங்களை அழைத்துச் செல்வார். இந்த அரங்கிற்குப் பின்னாக இப்பொழுதே செல்லுங்கள். திரு. லீ, தயவு செய்து முன்பாக வந்து அர்ப்பணித்தவர்களுக்காக ஜெபியுங்கள். ஆமென்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன்னால் போதகர் வாசித்தவ வேத பகுதி : ஏசாயா 52:13 - 53:7.
பிரசங்கத்திற்கு முன்னால் தனிப்பாடல் பாடியவர் திரு.பென்ஜமின் கினாசிட் கிரிஃபித்:
“A Crown of Thorns” (Ira F. Stanphill, 1914-1993).


முக்கிய குறிப்புகள்

ஆட்டுக்குட்டியானவரின் மௌனம்

(செய்தி எண்: 8 ஏசாயா 53)
THE SILENCE OF THE LAMB
(SERMON NUMBER 8 ON ISAIAH 53)
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற [மௌனம்] ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7).

I. முதலாவதாக, இயேசு என அழைக்கப்படும் இந்த மனிதன் யார்?
(யோவான் 10:30; 11:25; யோவான் 14:6.

II. இரண்டாவதாக, ஏன் இயேசு தன்னை துன்புறுத்திக் கொலை செய்தோறுக்கு முன்பாக தன்னைப் பாதுகாக்கவில்லை? மத்தேயு 16:21; 1
தீமோத்தேயு 1:15; யோவான் 18:37.

III. மூன்றாவதாக, இயேசுவின் அமைதியான பாடுகளைக் குறித்து நமது வேதபகுதி
 என்ன சொல்கிறது? மத்தேயு 27:13-14; மாற்கு 15:3-5; யோவான் 1:29;
1 கொரிந்தியர் 15:3.