Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




நிராகரிக்கப்பட்ட அறிக்கை

(ஏசாயா 53ன் மீதான பிரசங்க எண் 2)
THE REJECTED REPORT
(SERMON NUMBER 2 ON ISAIAH 53)
(Tamil)

Dr. R. L. ஹைமர்ஸ் ஜுனியர் அவர்களால்
Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 3, 2013 கர்த்தருடைய நாளன்று காலை லாஸ் ஏஞ்சலஸ் பாப்திஸ்து டேபெர்னெக்கிலில் பிரசங்கிக்கப்பட்டது
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, March 3, 2013

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).


கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து ஏசாயா பேசுகிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏசாயா 52ம் அதிகாரத்தின் கடைசி 3 வசனங்களிலிருந்து நான் பிரசங்கித்தேன். “மனுஷனைப் பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும் மனுப்புத்திரரைப் பார்க்கிலும் அவருடைய ரூபமும் இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே” (ஏசாயா 52: 14). பாடுப்பட்ட கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசி அங்கு கூறியுள்ளார். அடிக்கப்பட்டு நமது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்ட பின் உயிரோடெழும்பிய இயேசுவின் காட்சி இது. “அவர் உயர்த்தப்பட்டு மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்” (ஏசாயா 52: 13). ஆயினும் குறிப்பிடப்பட்டுள்ள வேத பகுதியில், தேவனுடைய சுவிசேஷத்தை சிலர் மட்டுமே விசுவாசிப்பார்கள் என வேதனையோடு தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்.

பண்டிதர் எட்வர்ட் J. யெங் ஒரு பழைய ஏற்பாட்டின் விற்பன்னர். எனது முந்தைய போதகர் பண்டிதர் திமோத்தி லின் அவர்களின் நன்பரும் அவரோடு படித்தவருமாவார்.

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?”

என்ற வசனத்தை விளக்குகையில், “இது ஒரு கேள்வி என்பதை விட ஒரு ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வாசகம் எனலாம். இதற்கு ஒரு எதிர்மறையான பதில் தேவையில்லை. உலகில் சிறிய அளவிலுள்ள உண்மை விசுவாசிகள் மீது நமது கவனத்தைக் கொண்டு செல்லவே இவ்வாறு அது கேட்கப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதியாக விளங்கும் தீர்க்கதரிசியானவர், சிலர் மட்டுமே விசுவாசிப்பதைக் குறித்து தனது திகைப்பை வெளிப்படுத்திப் பேசுவதாக இவ்வசனம் அமைந்துள்ளது.” (பண்டிதர் எட்வர்ட் J. யெங், ஏசாயா புத்தகம், வில்லியம் B. எர்டுமென்ஸ் வெளியீட்டு நிறுவனம், 1972, பாகம் 3, பக்கம் 230)

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?”

அறிக்கை என்னும் வார்த்தைக்கு “அறிவிக்கப்பட்ட செய்தி” என்று பொருள். மார்ட்டின் லுத்தர் இதனை “எமது பிரசங்கித்தல்” என மொழியாக்கம் செய்துள்ளார். “எமது பிரசங்கித்தலை விசுவாசித்தவன் யார்?” இதற்கு இணையாய் இவ்வசனப் பகுதியிலுள்ள இனனொறு வாசகம், “கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” கர்த்தருடைய புயம் என்பது கர்த்தருடைய பெலத்தைக் குறிக்கிறது. எங்களது பிரசங்கித்தலை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? கிறிஸ்துவின் இரட்சிக்கும் வல்லமை யாருக்கு வெளிப்பட்டது?

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).

முதலாவது சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுதலை விசுவாசிக்க வேண்டும். பின்னர் கிறிஸ்துவிலுள்ள தேவ வல்லமையால் மாற்றப்பட வேண்டுமென இந்த வசனம் காண்பிக்கிறது. ஆயினும் ஒரு சிலரே விசுவாசித்து மனமாற்றம் அடைவர் என தீர்க்கதரிசியின் கேள்வி வெளிப்படுத்தப்படுகிறது.

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).

I. முதலாவதாக, கிறிஸ்துவானவர் பூமியில் ஊழியம் செய்த போது சிலர் விசுவாசித்து மனமாற்றமடைந்தனர்.

இயேசுவானவர் லாசரு வைக்கப்பட்ட கல்லறைக்கு வந்தார். அவன் மரித்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இயேசு அவர்களிடம், “கல்லை எடுத்துப் போடுங்கள்” என்றார் (யோவான் 11: 39). லாசருவின் சகோதரி அவரைத் தடுக்க விரும்பினாள். அவள் சொன்னாள், “ஆன்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே” (அதே வசனம்). ஆனாலும் அவர்கள் இயேசுவின் சொல் கேட்டு கல்லறையின் வாசலை மூடியிருந்த கல்லை அகற்றினார்கள். பின்பு இயேசுவானவர் “சத்தமாய்க் கூப்பிட்டார், லாசரு வெளியே வந்தான். பிரேதச் சீலைகளினால் கால்களிலும் கைகளிலும் கட்டபட்டிருந்த, முகம் சீலைகளினால் மூடப்பட்டிருந்த மரித்துப்போனவன் வெளியே வந்தான். இயேசு அவர்களிடம், இவனைக் கட்டவிழ்த்து விடுங்கள் என்றார்” (யோவான் 11: 43-44).

“அப்போழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச் செய்து, நாம் என்ன செய்கிறது, இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே என்றனர்” (யோவான் 11:47).

அவர் நடப்பித்த பல அற்புதங்களை அவர்கள் கண்டனர். சாதாரன மக்கள் தங்களை விட்டுவிட்டு இயேசுவானவரை பின்பற்றிப் போவார்களே என அவர்கள் அஞ்சினர்.

“அந்நாள் முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள்” (யோவான் 11:53).

பிரதான ஆசாரியரும் பரிசேயரும் கூட்டங்களை நடத்தி இயேசுவைத் தொலைக்க எது சிறந்த வழி என ஆலோசித்தனர். அது “அவரைக் கொன்றுவிடுவதுதான்”. அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார்:

“அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. கர்த்தாவே, எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது (யோவான் 12:37-38).

இயேசுவானவர் 5000 பேருக்கு அற்புதமாக உணவளித்ததை அவர்கள் கண்டனர். அவர் தொழுநோயாளிகளைச் சுகமாக்கினதையும், குருடரைக் காணச் செய்ததையும் அவர்கள் கண்டனர். அவர் பிசாசுகளை துரத்தியதையும், திமிர்வாதக்காரரை ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வந்ததையும் அவர்கள் பார்த்தனர். ஒரு விதவையின் மரித்த மகனை அவர் உயிரோடு எழுப்பினார். தண்ணீரை திராட்சரசமாக அவர் மாற்றினதை அவர்கள் கண்டதுமல்லாமல் அவரது வார்த்தைகளை அவர்கள் கேட்டனர்.

“இயேசு ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருக்கிற சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி அவர்களை சொஸ்தமாக்கினார்” (மத்தேயு 9:35).

என்றபோதிலும், அவர் லாசருவை உயிரோடு எழுப்பியபோது அவர்கள், “அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள்” (யோவான் 11:53).

“அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. கர்த்தாவே, எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது (யோவான் 12:37-38).

ஆம், கிறிஸ்துவானவரின் உலக ஊழியத்தின்போது வெகு சிலரே அவரை விசுவாசித்து மனமாற்றமடைந்தனர்.

II. இரண்டாவதாக, அப்போஸ்தலருடைய காலத்திலும் வெகு சிலரே விசுவாசித்து மனமாற்றமடைந்தனர்.

உங்களது வேதாகமத்தில் ரோமர் 10: 11-16ஐ எடுத்துக்கொள்ளுங்கள். நாம் எழுந்து நின்று இவ்வேத பகுதியை வாசிக்கலாம்.

“அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? என்று சொல்லுகிறான்” (ரோமர் 10:11-16).

இப்பொழுது நீங்கள் அமரலாம்.

இந்த வேதாகமப் பகுதியில் வசனம் 12ல் கூறப்படுவதைக் கவனியுங்கள்,

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (ரோமர் 10:12).

இதை அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவானவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதினார். இவ்வாறாக, அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தின் பிற்பட்ட பகுதியில் ரோமர் புஸ்தகத்தை எழுதினார். இயேசுவானவர் கிட்டத்தட்ட முற்றிலும் யூதருக்காக பேசியிருக்கையில் பவுல் யூதரோடும் புறஜாதியாரோடும் பேசுகிறார். பவுல் சொன்னார், “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை”. மாந்தர் யாவருக்கும் இயேசு தேவை!

என்றபோதிலும், தமக்கு முன்பிருந்த யூதரல்லாதவருக்கு இயேசுவானவர் கூறிய அதே காரியத்தை ஏசாயா 53: 1ஐ சுட்டிக்காட்டி, சிறிய அளவு புறஜாதியானவர் மட்டுமே விசுவாசிப்பார்களென வேதனைப்பட்டுக் கூறுகிறார். புறஜாதியாரில் பெரும்பாலானோர் யூதர்களைக் காட்டிலும் சற்று அதிகமாக சுவிசேஷத்துக்கு செவிமடுப்பர் என ஏசாயா 53: 1ல் தீர்க்கதரிசி சொன்னதை சுட்டிக்காட்டி பவுல் கூறுகிறார். ஏசாயாவின் புகார் செய்தலை பவுல் மேற்கோள் காட்டுகிறார்.

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).

யூதர்களைக் காட்டிலும் புறஜாதி மக்கள் சுவிசேஷத்திற்கு அதிக திறந்த மனதோடிருந்தனர். அவ்வாறிருந்தாலும், பவுல் மற்றும் மற்ற அப்போஸ்தலரின் காலத்தில் குறைந்த அளவு புறஜாதியினர் மட்டுமே இயேசுவில் நம்பிக்கை வைத்தனர். அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தில் நாம் காண்கிறபடி, அப்போஸ்தலர்களின் காலத்தில் பல பெரிய எழுப்புதல்கள் நடைப்பெற்றன. ஆனாலும் இவ்வாறான எழுப்புதல்களின் மூலம் மிகச் சிறிய அளவு புறஜாதிகளே கிறிஸ்துவில் இரட்சிக்கப்பட்டனர். சுவிசேஷம் அறிவித்தல் என்பது ரோமர் மத்தியில் கூட கடினமானதாயிருந்தது!

கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் சில மனம் மாறியவர்களை மட்டுமே கண்டனர். இவ்வாறாக, கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினரை, அதுவும் துன்பப்படுத்தப்பட்ட சிறுபான்மையினர்! ஆனபடியால், சுவிசேஷத்தை பெரும்பாலோர் ஏற்காததை விளக்க நமது வேதவசனப் பகுதியைக் குறிப்பிடுகின்றனர் யோவானும் பவுலும் - அதாவது, தாங்கள் பிரசங்கித்ததைக் கேட்ட பெரும்பான்மையினர் ஏன் மனமாற்றமடையவில்லை என்பதை இவ்வாறாக விளக்குகின்றனர்.

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).

கிறிஸ்தவ வரலாற்றில் காலம் காலமாக இவ்விதமாகத்தான் நடந்து வருகிறது. எப்போதுமே, எந்த இடத்திலும் ஒரு சிறிய அளவு மக்கள் மட்டுமே சுவிசேஷத்தில் நம்பிக்கை வைத்து உண்மையில் மனமாற்றம் அடைகின்றனர். இன்றைய உலகத்திலும் ஆது அவ்வாறாகவே உள்ளது. எதுவும் மாறவில்லை. இது நம்மை நமது இறுதிக் குறிப்பிற்கு கொண்டு வருகிறது.

III. மூன்றாவதாக, மிகச் சிலரே இன்று விசுவாசித்து மனமாற்றம் அடைகின்றனர்.

வேதனையின் கேள்வியான ஏசாயாயின் புலம்பல் என்னும் உண்மை நிலையை நமது நாட்களில் நாம் இன்று சந்தித்து வருகிறோம்.

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).

சுவிசேஷப் பிரசங்கித்தலை நம்புவோர் இன்று குறைவானவர்களே, கிறிஸ்துவின் வல்லமையால் இரட்சிக்கப்படுவோர் இன்றும் வெகு சிலரே என்பது வருத்தமளிக்கிறது. நமது மிகவும் நெருங்கிய உறவினர்கள் கூட கிறிஸ்துவை நிராகரிக்கின்றனர். பிரசங்கத்தைக் கேட்க நாம் ஆலயத்துக்குக் கூட்டி வருவோரில் சிலர் மட்டுமே மனமாற்றமடைகின்றனர் என்பதை உங்களில் பலரும் அறிவீர்கள். இதைப் பற்றி மூன்று காரியங்களைக் குறிப்பிட நான் விரும்புகிறேன்:

(1) முதலாவது, பெரும்பாலான மக்கள் இரட்சிக்கப்படுவார்களென பரிசுத்த வேதாகமத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? உண்மையைச் சொல்லப்போனால், இதற்கு எதிரானதை இயேசுவானவர் கூறியுள்ளார்,

“இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது; அதன் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுப்பிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13-14).

அதை கண்டுப்பிடிக்கிறவர்கள் சிலரே! நாம் நம்பினதைவிடக் குறைவான மனமாற்றங்கள் நமது ஊழியத்தில் வரும்போது இதை நமது மனதிற்கு கொண்டுவர வேண்டும்.


அடுத்ததாக நான் கூற விரும்புவது:

(2) எத்தனை பேர் இரட்சிக்கப்படுவார்கள் என்பதன் அடிப்படையில் நமது சுவிசேஷம் அறிவித்தலின் உந்துவிசை இருக்கக் கூடாது. கொஞ்சம் பேரோ, அதிகம் பேரோ, எத்தனை பேர் மனமாற்றம் அடைகின்றனர் என்பதன் மீது நமது கண்களை வைக்கக் கூடாது. நமது நோக்கம் தேவனுக்குக் கீழ்ப்படிவதை அடிப்படையாய்க் கொண்டது. சுவிசேஷம் அறிவிக்கச் செல்கையில் நமது கண்கள் தேவன் மீது பதிக்கப்பட்டிருக்க வேண்டும். நமது கீழ்ப்படிதல் தேவன் மீது பதிக்கப்பட்டிருக்க வேண்டும. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் நமது கண்கள் தேவன் மீதும் நமது கீழ்ப்படிதல் அவரிலும் நிலைத்திருக்க வேண்டும்! கிறிஸ்துவானவர் கூறியிருக்கிறார்,

“நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்கு 16:15).

ஜனங்கள் செவிமடுப்பார்களோ இல்லையோ, அவர்கள் இரட்சிக்கப்படுவார்களோ இல்லையோ, கிறிஸ்து சொன்னதை நாம் அப்படியே செய்ய வேண்டும். கிறிஸ்துவானவர் கட்டளையின்படி நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும்! மனிதரின் மாறுத்தரம் நமது வெற்றியை நிர்ணயிப்பதில்லை! ஆனபடியால், ஜனங்கள் சுவிசேஷத்தை விசுவாசித்தாலும் விசுவாசியாவிட்டாலும் நாம் சுவிசேஷம் அறிவிப்பதை விடாமல் செய்ய வேண்டும் !


அப்புறம், இதிலிருந்து மூன்றாவது காரியம் வெளிவருகிறது,

(3) கிறிஸ்துவின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ? கிறிஸ்துவுக்குள் நீங்கள் மனமாற்றம் அடைந்துள்ளீர்களா? விசுவாசத்தினால் கிறிஸ்துவண்டை நீங்கள் வருவீர்களா? உங்களது குடும்பத்திலுள்ள மற்ற யாவரும், உங்களது நண்பர்கள் அனைவரும் கிறிஸ்துவை ஒதுக்கினாலும் நீங்கள் கிறிஸ்துவைத் தேடுவீர்களா? நீங்கள் அவரன்டை வருவீர்களா? கிறிஸ்துவானவர் சொன்னதை மறக்க வேண்டாம்,

“விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” (மாற்கு 16:16).

நீங்கள் இயேசுவிடம் வந்து, மனமாற்றமடைந்து ஞானஸ்நானம் பெற ஆயத்தமா? அல்லது இரட்சகரை நிராகரித்து நரகத்தின் நித்திய அக்கினியில் வெந்து அழியும் கணக்கற்றோரில் நீங்களும் ஒருவரா?

“விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” (மாற்கு 16:16).

நீங்கள் நரகத்தில் அழியும் திரள்கூட்டத்திலிராதபடி, இந்த உள்ளூர் சபையின் உறுப்பினராக மாற வேண்டுமென்பதே எனது ஜெபமாகும். உலகை விட்டு வெளியே வாருங்கள்! விசுவாசத்தினால் இயேசுவன்டை வாருங்கள்! இந்த உள்ளூர் சபைக்குள் வாருங்கள். இயேசுவானவரின் இரத்தம் மற்றும் நீதியினால் எல்லா காலத்திற்கும், நித்தியமாக இரட்சிக்கப்படுவீர்களாக!

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).

விசுவாசித்து மனமாற்றமடைவோரில் நீங்களும் ஒருவராயிருப்பீர்களாக! பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்தை நம்புகின்ற ஒரு சிலரில் நீங்களும் ஒருவராயிருப்பீர்களாக! “ஆம், இயேசு என் பாவத்திற்காக கிரயம் செலுத்திவிட்டார். ஆம், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். ஆம், விசுவாசத்தினால் நான் அவரண்டை வருகிறேன்.” என நீங்கள் சொல்லலாம். தேவனுடைய புயம் வெளிப்படுத்தப்பட்டு, இயேசுவை நம்புவதன் அடிப்படையில் இரட்சிப்பை அனுபவிக்கும் ஒரு சிலரில் நீங்களும் காணப்படுவீர்களாக! “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டி” (யோவான் 1: 29). இயேசுவானவரிடம் வந்து, அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தால் சுத்திகரிக்கப்படும் நபர்களில் ஒருவராக நீங்கள் காணப்படுவீர்களாக! எங்களது அறிக்கையை விசுவாசிக்கும் கிருபையைத் தேவன் உங்களுக்கு அருளி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பளிக்கும் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீர்களாக! ஆமேன்!

அனைவரும் எழுந்து நின்று பாடல் தாளிலுள்ள 7வது பாடல், “நான் முன் வருகிறேன்” பாடுவோம்.

உமது அழைப்பின் சத்தம் கேட்கிறேன், அது என்னை உம்மண்டை கூப்பிடுகிறது
   கல்வாரியில் புரண்டோடும் உம் திவ்ய இரத்தத்தில் கழுவிட.
நான் வருகிறேன், ஆண்டவரே! இப்போதே உம்மண்டை வருகிறேன்!
   கல்வாரியில் புரண்டோடும் இரத்தத்தால் சுத்திகரியும், கழுவிடும்.

பாவத்தோடு பலவீனனாய் வந்தாலும், என்னைப் பலப்படுத்த உறுதியாயுள்ளீர்;
   எனது குற்றநிலை யாவும் கழுவினீர்; கறையின்றி எல்லாம் தூய்மையாகின.
நான் வருகிறேன், ஆண்டவரே! இப்போதே உம்மண்டை வருகிறேன்!
   கல்வாரியில் புரண்டோடும் இரத்தத்தால் சுத்திகரியும், கழுவிடும்.
(“நான் முன் வருகிறேன்”, லூயிஸ் ஹாட்சௌ, 1828-1919, என்பவறால் இயற்றப்பட்டது)

இயேசுவானவரால் உங்களது பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட நீங்கள் விரும்பினால் பின்புறமுள்ள அரங்கத்திற்கு இப்போதே வாருங்கள். பண்டிதர் கேகன் உங்களை ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு சம்பாஷிப்பார். அர்ப்பணித்து முன் வந்த யாவருக்காகவும் பண்டிதர் ச்சான் ஜெபிப்பார்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்தின் முன்னர் ஏசாயா 52: 13 – 53: 1 என்ற வேதபகுதியை வாசித்தவர் திரு ஏபல் ப்ரூடாம்மே.
“ஒரு முட்கிரிடம்” என்ற தனிப்பாடலை பிரசங்கத்திற்கு முன் பாடியவர் திரு பெஞ்சமின் கிங்கெய்ட் கிரீஃபித்: “ஒரு முட்கிரிடம்”
(ஐரா F. ஸ்டான்ஃபில், 1914-1993, என்பவறால் இயற்றப்பட்டது).


முக்கிய குறிப்புகள்

நிராகரிக்கப்பட்ட அறிக்கை

(ஏசாயா 53ன் மீதான பிரசங்க எண் 2)

THE REJECTED REPORT
(SERMON NUMBER 2 ON ISAIAH 53)

Dr. R. L. ஹைமர்ஸ் ஜுனியர் அவர்களால்

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?” (ஏசாயா 53:1).

(ஏசாயா 52:14, 13)

I.      முதலாவதாக, கிறிஸ்துவானவர் பூமியில் ஊழியம் செய்த போது சிலர் விசுவாசித்து மனமாற்றமடைந்தனர், யோவான் 11:39, 43-44, 47, 53;
12:37-38; மத்தேயு 9:35.

II.    இரண்டாவதாக, அப்போஸ்தலருடைய காலத்திலும் வெகு சிலரே விசுவாசித்து மனமாற்றமடைந்தனர், ரோமர் 10:11-16.

III.  மூன்றாவதாக, மிகச் சிலரே இன்று விசுவாசித்து மனமாற்றம் அடைகின்றனர், மத்தேயு 7:13-14; மாற்கு 16:15, 16; யோவான் 1:29.